தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் அதிகம் உள்ள மாவட்டங்களில் மத்திய அரசின் விதிகளுக்கு உட்பட்டு தடுப்பூசி போடுவதை தீவிரப்படுத்த வல்லுநர் குழு அமைக்கப்படும் என தலைமைச் செயலாளருடனான மருத்துவக்குழுவினரின் ஆலோசனைக் குழுவில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
மாநிலத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் எடுக்கப்பட வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தலைமையில் மருத்துவக்குழுவினர் முக்கிய ஆலோசனை மேற்கொண்டனர். விரிவான விவாதத்திற்கு பின் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன்படி, கல்லூரிகள் இறுதியாண்டு மாணவர்களை தவிர மற்ற அனைவருக்கும் இணைய வழியில் பாடங்கள் நடத்தவும், தேர்வுகள் ஏதேனும் நடைபெற்றுக் கொண்டிருந்தால் நிலையான வழிமுறைகளை கடைப்பிடித்து வரும் 31 ஆம் தேதிக்குள் அவற்றை முடிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழிற்சாலைகள் மற்றும் அலுவலகங்களில் 100 விழுக்காடு பணியாளர்களுடன் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. வணிக வளாகங்கள், திரையரங்குகள், உணவுக்கூடங்களில் விதிமீறல்கள் காணப்பட்டால் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்க நேரிடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. பேருந்துகள் மற்றும் பொதுப்போக்குவரத்துகளில் பயணம் செய்வோர் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் எனவும், அதனை அதிகாரிகள் தீவிரமாக கண்காணிக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக கொரோனா பாதிப்புகள் அதிகம் உள்ள மாவட்டங்களில் மத்திய அரசின் விதிகளுக்கு உட்பட்டு தடுப்பூசி போடுவதை தீவிரப்படுத்த வல்லுநர் குழு அமைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.