திருவள்ளுவர் இந்து மதம் எனக்கூறுவது அவரவர்களின் விருப்பம் என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறியுள்ளார்.
தமிழக பாஜகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், திருவள்ளுவரின் உடையை காவி நிறத்தில் மாற்றியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தஞ்சையில் வள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்டது அந்த விவகாரத்தை மேலும் பூதாகரமாக்கியுள்ளது. திமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும் காவி ஆடை, திருநீறு பூச்சுடன் வள்ளுவரின் படத்தை வெளியிட்டது மற்றும் வள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்டதற்கு கண்டனங்கள் தெரிவித்தன.
இந்நிலையில், புதிய தலைமுறையில் நேர்பட பேசு நிகழ்ச்சியில் பேசிய தமிழ் வளர்ச்சித்துறை மாஃபா பாண்டியராஜன், “திருவள்ளுவர் இப்படித்தான் இருக்க வேண்டும் என அரசாணை ஏதும் இல்லை. திருவள்ளுவர் இந்து மதம் எனக்கூறுவது அவரவர்களின் விருப்பம். தியான கோலத்தில் இருந்ததால் வள்ளுவரை சமண மதத்துடன் பிரிட்டிஷார் ஒப்பீடு செய்தனர்.
திருவள்ளுவருக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் கிடைப்பதற்கான நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. என்றும் இல்லாத அளவுக்கு தற்போது தரணியில் தமிழ் கோலோச்சிக் கொண்டிருக்கிறது” என்று கூறியுள்ளார்.