தமிழ்நாடு

பல்லடம்: தொடரும் வாகன திருட்டு - சிசிடிவி காட்சிகள் இருந்தும் கண்டுபிடிக்க முடியாத நிலை!

webteam

பல்லடத்தில் வாகன திருட்டு சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது. சிசிடிவி ஆதாரங்கள் இருந்தும் திருடர்களை கண்டுபிடிக்க முடியாமல் நிலை இருந்து வருவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த மூன்று நாட்களாக திருப்பூர் மாவட்டம் பல்லடம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான ராயர்பாளையம், வெங்கடாபுரம், பச்சாபாளையம் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்கள் திருடு போவது தொடர் கதையாகி வருகிறது. இதையடுத்து திருடர்கள் இருசக்கர வாகனங்களின் பூட்டை உடைத்து திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகிய வண்ணம் உள்ளது.

இதையடுத்து நேற்று நள்ளிரவில் பல்லடம் பச்சாபாளையத்தில் வசித்து வரும் நிகில் என்பவர் விலையுயர்ந்த தனது இருசக்கர வாகனத்தை வீட்டின் முன்பு நிறுத்தி விட்டு உறங்கச் சென்றுள்ளார். இதையடுத்து அடுத்த நாள் காலை எழுந்து பார்த்தபோது தனது இருசக்கர வாகனம் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த நிகில், பல்லடம் காவல்துறையில் புகார் அளித்தார்.

இதைத் தொடர்ந்து நள்ளிரவில் மர்ம நபர் ஒருவர் இருசக்கர வாகனத்தை திருடிச் செல்லும் காட்சிகள் அருகில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன. இந்த திருட்டு சம்பவம் குறித்து பல்லடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதேபோன்று நேற்றிரவு பல்லடம் பேருந்து நிலையத்திற்கு எதிர்ப்புறம் வசித்து வரும் வேலுச்சாமி என்பவரது இருசக்கர வாகனத்தையும் மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். மேலும் வேலுச்சாமி வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த இரண்டு வாகனங்களை உடைக்க முயன்று உடைக்க முடியாததால் வேலுச்சாமியின் வாகனத்தை மட்டும் திருடி சென்றுள்ளனர்.

கடந்த மூன்று நாட்களாக ஏழு இடங்களில் இருசக்கர வாகனங்கள் தொடர்ச்சியாக இரவு நேரங்களில் திருடப்படும் சம்பவம் அரங்கேறி வருகிறது. சிசிடிவி காட்சிகளோடு ஆதாரங்கள் இருந்தும் திருடர்களை பிடிக்க முடியாமல் பல்லடம் காவல் துறையினர் திணறி வருகின்றனர். பல்லடம் முழுவதும் காவல் துறையினர் ரோந்து பணிகளை தீவிர படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.