பழனி தைப்பூசத் திருவிழா தேரோட்டம் pt desk
தமிழ்நாடு

பழனி தைப்பூசத் திருவிழா தேரோட்டம் | அரோகரா கோஷத்துடன் தேரை வடம்பிடித்து இழுத்த பக்தர்கள்

பழனியில் தைப்பூசத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்;று நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்து வழிபட்டனர்.

PT WEB

செய்தியாளர்: தி.கார்வேந்தபிரபு

அறுபடை வீடுகளில் மூன்றாம்படை வீடான பழனியில் தைப்பூசத் திருவிழா கடந்த 5ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர். பழனி பெரியநாயகி அம்மன் கோயிலில் தைப்பூசத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று நடைபெற்றது.

ஊர்க்கோயிலான பழனி பெரியநாயகி அம்மன் கோயிலில் நேற்று பகல் அருள்மிகு முத்துக்குமார சுவாமி - வள்ளி, தெய்வானை சமேத தேர்ஏறும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து மாலை பூஜை செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து தேர் நிலையில் இருந்து துவங்கிய தேரோட்டம் நான்கு ரத வீதிகளிலும் வலம்வந்தது.

தேரில் வலம் வந்த அருள்மிகு முத்துக்குமார சுவாமி - வள்ளி, தெய்வானையை வீடுகளில் முன்பு கோலமிட்டு வரவேற்றனர். வீடு தேடி வந்து அருள்பாலிக்கும் முருகனுக்கு, பக்தர்கள் தேங்காய் உடைத்தும் தீபாராதனை செய்தும் வழிபட்டனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா கோசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.