செய்தியாளர்: தி.கார்வேந்தபிரபு
திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் தைப்பூசத் திருவிழா கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. பத்து நாட்கள் நடைபெறும் தைப்பூசத் திருவிழாவில் நாளை (11ஆம் தேதி) தேரோட்டம் நடைபெற உள்ளது.
இதனை முன்னிட்டு 10, 11, 12 ஆகிய மூன்று நாட்களுக்கு மலைக்கோயில் சாமி தரிசனம் செய்ய கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பக்தர்கள் மலைக்கோயிலில் அனைத்து வரிசைகளிலும் கட்டணமின்றி இலவசமாக தரிசனம் செய்யலாம் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
மேலும் 10, 11, 12 ஆகிய மூன்று நாட்களும் பக்தர்கள் பயன்பெறும் வகையில் அரசு நகர பேருந்துகள் சண்முக நதி மற்றும் ரயில் நிலையத்தில் இருந்து பழனி பேருந்து நிலையம் வரை திருக்கோயில் சார்பில் கட்டணம் இல்லாமல் இயக்கப்படுகிறது.