பழனி முருகன் கோயிலுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்ட பக்தர்கள் வருவதை தவிர்க்கவேண்டும் என்று கொரோனா வைரஸ் எதிரொலி காரணமாக கோயில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
பழனி முருகன் கோயிலுக்கு கேரளாவில் இருந்து அதிக பக்தர்கள் வந்துகொண்டிருக்கின்றனர். கேரளாவில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகளவில் உள்ளது. அதனால், கேரளாவிற்கு செல்வதை தவிர்க்குமாறு தமிழக அரசு சார்பில் கேட்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இருமல், சளி, மூச்சுத் திணறல் உள்ள பக்தர்கள் பழனி முருகன் கோயிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என்றும், திருவிழா காலங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதையும் தவிர்க்க வேண்டும் என்றும் கோயில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருப்பதாக பழனி கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அத்துடன் மலைக்கோயில் ரோப்கார், மின் இழுவை ரயில் நிலையம், படிப்பாதை ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா நோய்த்தடுப்பு முதலுதவி சிகிச்சை மையங்களில் உள்ள மருத்துவர்களைச் அணுகி பக்தர்கள் ஆலோசனை பெறவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக, ஆந்திராவின் திருப்பதி கோயிலுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்ட பக்தர்கள் வரவேண்டாம் என திருப்பதி தேவஸ்தானம் போர்டு அறிவித்திருக்கிறது. இதேபோன்று சபரிமலை கோயிலுக்கும் உடல்நிலை பாதிக்கப்பட்ட பக்தர்கள் வருகை தர வேண்டாம் என கோயில் தேவசம் கேட்டுக்கொண்டுள்ளது.