தீப்பிடித்து எரிந்த கார் pt desk
தமிழ்நாடு

பழனி: சானிடைசர் பேரல் வெடித்து தீப்பிடித்து எரிந்த கார் - கேரள பக்தர்கள் காவல்நிலையத்தில் புகார்

பழனி முருகன் கோயிலுக்குச் சொந்தமான தண்டபாணி நிலையம் தங்கும் விடுதியில் வைக்கப்பட்டிருந்த சானிடைசர் பேரல் வெடித்து கார் முற்றிலும் எரிந்து நாசமானது. இந்த விபத்தில் துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்த இருவர் காயமடைந்தனர்.

PT WEB

செய்தியாளர்: தி.கார்வேந்தபிரபு

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்குவதற்கு வசதியாக திருக்கோவில் நிர்வாகத்திற்குச் சொந்தமான தண்டபாணி நிலையம், இடும்பன் குடில் மற்றும் கிரிவீதி கோசாலை ஆகிய இடங்களில் தங்கும் விடுதிகள் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தங்கும் விடுதியில் பிரதானமான தண்டபாணி நிலையத்தில் கேரளாவைச் சேர்ந்த குடும்பத்தினர் கடம்பன் இல்லம் பகுதியில் அறை எடுத்து தங்கி இருந்த அவர்கள் காரை அறைக்கு வெளியே நிறுத்தி வைத்திருந்தனர்.

தீப்பிடித்து எரிந்த கார்

இந்நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவர்களது கார் அருகே தண்டபாணி நிலையம் துப்புரவு பணிகளுக்காக மூன்று சானிடைசர் பேரல்கள் வைக்கப்பட்டிருந்தது. சானிடைசர் பேரல் திடீரென வெடித்து தீப்பிடித்தது. இதில் சானிடைசர் தெறித்து அருகில் இருந்த கார் தீப்பிடித்து எறியத் துவங்கியது. பேரல் வெடித்த சத்தம் கேட்டு அதிர்ச்சி அடைந்த பக்தர்கள் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பழனி அடிவாரம் காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் காரில் தீ பிடித்து எரிவதை அணைக்க முயற்சித்தனர்.

ஆனால், சானிடைசரில் ஏற்பட்ட தீயை அணைப்பதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டது. மேலும் இந்த விபத்தில் தண்டபாணி நிலையத்தில் துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்த அத்தாலு மற்றும் முருகன் ஆகிய இரு பணியாளர்கள் காயமடைந்தனர். காயமடைந்த இருவரையும் பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து கார் உரிமையாளர்கள், “திருக்கோவில் நிர்வாகத்தின் அலட்சியத்தாலையே தீ விபத்து ஏற்பட்டது” என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்களை சமாதானம் செய்த போலீசார், காவல் நிலையத்தில் புகார் அளிக்குமாறு அறிவுறுத்தினர்.