செய்தியாளர்: கார்வேந்தபிரபு
பழனி அருகே நெய்க்காரப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பெரிய கலையம்புத்தூரில் ஐகோர்ட் பத்ரகாளியம்மன் கோயில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடத்தப்படுவது வழக்கம். இதன்படி இன்று காலை 8 மணியளவில் ஜல்லிக்கட்டு தொடங்கியது. வாடிவாசலில் இருந்து முதல் காளையாக பத்ரகாளியம்மன் கோயிலுக்குச் சொந்தமான காளை மற்றும் பல்வேறு கோயில் காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன.
இதனைத் தொடர்ந்து திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு கோவை, கரூர், மதுரை, திருச்சி, தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட 600க்கும் மேற்பட்ட காளைகள் வரிசையாக வாடிவாசலில் சீறிப்பாய்ந்தன. 400க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் காளைகளை அடக்க முற்பட்டனர். 3 பிரிவுகளாக சுழற்சி முறையில் எட்டு சுற்றுகளாக வீரர்கள் மாடுபிடிக்க அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், மாடுகளை அடக்கிய வீரர்களுக்கு தங்க நாணயம், வெள்ளி நாணயம், பீரோ, கட்டில், சேர், குத்துவிளக்கு, செல்போன், உள்ளிட்ட பொருட்கள் பரிசுகளாக வழங்கப்பட்டது. அதேபோல அடங்காத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
ஆத்தூர் அய்யம்பாளையத்தைச் சேர்ந்த அருண்குமார் என்ற மாடுபிடி வீரரின் மாடு முட்டியதில் கழுத்தில் படுகாயமடைந்த அவர், பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.