பழனி கோயில் சிலை முறைகேடு வழக்கை ஐ.ஜி. பொன்.மாணிக்கவேலே தொடர்ந்து விசாரிக்க வேண்டும் என்று தமிழக ஆளுநருக்கு
இந்து அறநிலையத்துறை முன்னாள் அமைச்சர் வி.வி.சாமிநாதன் கடிதம் எழுதியுள்ளார்.
ஆளுநருக்கு எழுதியுள்ள கடிதத்தில், பழனி சிலை முறைகேடு விசாரணையை நீர்த்துப்போக செய்யவே வழக்கு சி.பி.சி.ஐ.டி.-க்கு
மாற்றப்பட்டு உள்ளதாக சாமிநாதன் குற்றம்சாட்டியுள்ளார். பொறுப்பில் இருந்த சில அமைச்சர்கள் மற்றும் அதிகரிகளை காப்பாற்றவே
வழக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சிலை தொடர்பான வழக்குகளை ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் விசாரிக்க
வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும், சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி இருப்பது சரியல்ல என்றும் அவர் கூறியுள்ளார்.
2004ம் ஆண்டு பழனி பாலதண்டாயுதபானி கோயில் உற்சவர் சிலை செய்ததில் நடந்த முறைகேட்டை, சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு
ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் தலைமையிலான குழு கண்டுபிடித்தது. முறைகேடு தொடர்பாக சிலையை செய்த ஸ்தபதி முத்தையா
மற்றும் அப்போதைய பழனி கோயில் இணை ஆணையர் கே.கே.ராஜா கைது செய்யப்பட்டனர். முறைகேடு புகார் என்பதால் வழக்கை
சி.பி.சி.ஐ.டி.-க்கு மாற்றி டி.ஜி.பி. உத்தரவிட்டார்.