தமிழ்நாடு

பழனி முருகன் கோவில் பங்குனி உத்திர திருவிழா: அரோகரா கோஷத்துடன் நடைபெற்ற தேரோட்டம்

kaleelrahman

பழனி முருகன் கோவில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு முக்கிய திருவிழாவான இன்று அரோகரா கோஷம் முழங்க தேரோட்டம் நடைபெற்றது.

ஆறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழனி முருகன் கோயிலில் தைப்பூச நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்களும், சாதாரண நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்களும் சாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்நிலையில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 22ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

இதையடுத்து தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெற்ற திருவிழாவில் முக்கிய திருவிழாவான நேற்று இரவு முத்துக்குமார சுவாமி வள்ளி - தெய்வானை திருக்கல்யாணம் நடைபெற்றது. ஏழாம் நாள் முக்கிய திருவிழாவான இன்று பழனிமலை அடிவாரத்தில் கீரிவிதி பகுதிகளில் திருத்தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா கோஷம் முழங்க தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

முன்னதாக கொரோனா நோய் பரவல் காரணமாக ஆன்லைனில் பதிவு செய்யும் பக்தர்களுக்கு மட்டும் நாளொன்றுக்கு 25 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய கோவில் நிர்வாகம் சார்பில் அனுமதி கொடுத்திருந்தனர். மேலும் பங்குனி உத்திரம் திருவிழாவிற்கு இந்த ஆண்டு குறைந்த அளவிலேயே பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.