தமிழ்நாடு

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த நபரை ஊருக்குள் விடாத பொதுமக்கள்..!

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த நபரை ஊருக்குள் விடாத பொதுமக்கள்..!

webteam

பழனியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை முடிந்து குணமடைந்து வீட்டிற்கு திரும்பியவரை பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் அனுமதிக்க அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி பகுதியில் 5பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் வசித்த வீடுகளைச் சுற்றிய பகுதிகள் முழுவதும் தனிமை படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பழனி, அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கரூரில் சிகிச்சை பெற்றுவந்தார். பின்னர், சிகிச்சை முடிந்து மீண்டும் பழனிக்கு திரும்பி விட்டார்.

இதுகுறித்து தகவலறிந்து அண்ணாநகர் பகுதி‌யை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஒன்றிணைந்து பாதிக்கப்பட்ட நபரை பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் அனுமதிக்கக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர். தகவலறிந்து வந்த மருத்துவர்கள், வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதனையடுத்து பாதிக்கப்பட்ட நபரை உள்ளே அனுமதிக்க மாட்டோம் என்றும், அவரை பழனி அரசு மருத்துவமனையில் வைத்து கண்காணித்துக் கொள்வதாகவும் உறுதி அளித்ததை அடுத்து பொதுமக்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.