பாலமேடு ஜல்லிக்கட்டு முகநூல்
தமிழ்நாடு

காத்திருந்த காளையர்கள்.. சீறிப்பாய்ந்தது காளைகள்; அதிரடியாக தொடங்கிய பாலமேடு ஜல்லிக்கட்டு!

உலகப்புகழ்ப்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு தற்போது துவங்கியுள்ளது.

ஜெனிட்டா ரோஸ்லின்

பொங்கலின் முதல்நாளான நேற்று அனியாபுரத்திலும், இன்று பாலமேட்டிலும், நாளை அலங்காநல்லூரிலும் நடைபெற இருக்கிறது.

நேற்றைய தினம் மிகச்சிறப்பாக அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இந்தவகையில், உலகப்புகழ்ப்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு தற்போது துவங்கியுள்ளது. மருத்துவ பரிசோதனை காரணமாக, காலை 7 மணி அளவில் தொடங்கவிருந்த ஜல்லிக்கட்டு போட்டி, 7. 30 மணி அளவில் தொடங்கியுள்ளது.

அமைச்சர் மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் சங்கீதா தலைமையில் மாடு பிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றனர். ஜல்லிக்கட்டு போட்டியின் முதல் நிகழ்வாக, 7 கோயில் காளைகள் அவிழ்த்துவிடப்பட்டது. பின்னர், அமைச்சர் மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் சங்கீதா கொடியசைத்து துவங்கி வைத்தார்.

இதில், 1100 காளைகள், 900 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். வெற்றி பெறுபவர்களுக்கு தங்க, வெள்ளி, நாணயங்கள், சைக்கிள், அண்டா, டிவி என பல பரிசுகள் காத்திருக்கிறது.

சிறந்த மாடுபிடி வீரருக்கு துணை முதல்வர் சார்பில் கார் பரிசு வழங்கப்படுகிறது. சிறந்த காளைக்கு முதலமைச்சர் சார்பில் டிராக்டர் பரிசு கொடுக்கப்பட இருக்கிறது. பாலமேடு ஜல்லிக்கட்டு களம் நீளமானது என்பதால் போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

. மேலும், பாதுகாப்பு பணியாக்காக 2500 காவலர்கள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

மருத்துவ பரிசோதனை!

முன்னதாக , கொம்பு கூர்மையாக உள்ளதா? , கொம்பில் ரசாயனம் பூசப்பட்டுள்ளதா?, என காளைகளுக்கு மருத்துவப்பரிசோதனை செய்யப்பட்டது. காளைகளுக்கு போலி டோக்கன் வழங்குவதை தடுக்க QR கோடு முறை பயன்படுத்தப்பட்டது. 4820 காளைகளை ஆய்வுசெய்ததில் 1100 காளைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. காளைகளை பரிசோதனை செய்ய 110 கால்நடை மருத்துவர்கள் களத்திற்கு வரவழைக்கப்பட்டனர். மாடுபிடி வீரர்களுக்கும் மருத்துவ பரிசோதனை மேற் கொள்ளப்பட்டது.