தமிழ்நாடு

‘வீரர்களுக்கு அஞ்சலி’- பெட்ரோல் பங்குகளில் 15 நிமிடங்கள் விநியோகம் நிறுத்தம்

‘வீரர்களுக்கு அஞ்சலி’- பெட்ரோல் பங்குகளில் 15 நிமிடங்கள் விநியோகம் நிறுத்தம்

webteam

காஷ்மீர் புல்வாமா தாக்குதலில் உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து பெட்ரோல் விற்பனை நிலையங்களிலும் 15 நிமிடங்கள் பெட்ரோல், டீசல் விநியோகம் நிறுத்தப்படும் என பெட்ரோலியம் விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் மத்திய ரிசர்வ் பாது‌காப்புப் படையினர் சென்ற வாகனங்கள் மீது பயங்கரவாதிகள் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தினர். இந்த கொடூரத் தாக்குதலில் 40 வீரர்கள் உயிர்த் தியாகம் செய்தனர். இந்த தாக்குதலுக்கு பிரதமர், முதலமைச்சர்கள், எதிர்கட்சித் தலைவர்கள், நடிகர்கள் என பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில், புல்வாமா தாக்குதலில் உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக பெட்ரோல் பங்குகளில் 15 நிமிடங்கள் பெட்ரோல், டீசல் விநியோகம் நிறுத்தப்படும் என்று பெட்ரோலியம் விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக தமிழ்நாடு பெட்ரோலியம் விற்பனையாளர்கள் சங்க தலைவர் கே.பி.முரளி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் “காஷ்மீர் புல்வாமா பகுதியில் எல்லை தாண்டிய தீவிரவாத கும்பலால் பலியான இந்திய எல்லை பாதுகாப்பு படைவீரர்களின் வீர மரணத்திற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இன்று (16.02.2019) இரவு 8.00 மணி முதல் 8.15 வரை 15 நிமிடங்கள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 4800 பெட்ரோல் விற்பனை நிலையங்களிலும் விளக்குகளை அணைத்து விற்பனையினை நிறுத்தி வீரர்களின் தியாகத்தை போற்றி, அவர்களது மறைவால் துயரும் அவர்தம் குடும்பத்தினருக்கு நமது ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்க அன்புடன் வேண்டுகிறோம்” என தெரிவித்துள்ளார்.