சமூக சேவகரான மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த சின்னப்பிள்ளைக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அவரைப் பற்றி பெரும்பாலானோருக்கு தெரிந்திருந்தாலும் கூட, இந்த நேரத்தில் யார் அவர் என்பதை தெரிந்து கொள்வோம்.
மதுரை மாவட்டம் கள்ளந்திரி பகுதியைச் சேர்ந்தவர் சின்னப்பிள்ளை. பெரிய அளவில் படிப்பு இல்லை. பொருளாதார வசதியும் இல்லை. அரசியல் செல்வாக்கும் இல்லை. இப்படி எந்தவொரு பின்புலமும் இல்லாமல் தனது செயல்பாடுகளால் இன்று பத்மஸ்ரீ விருதை பெற்றிருக்கிறார். இதற்கு முன்பும் அவருக்கு கிடைத்த விருதுகள் ஏராளம். காரணம், மகளிர் சுய உதவிக் குழுக்கள் பெரிய அளவில் வளர்ந்ததற்கு முன்னோடியாக இருந்தவர்களில் ஒருவர் சின்னப்பிள்ளையும் கூட.
மதுரையில் செயல்பட்டு வந்த தொண்டு நிறுவனம் ஒன்று 'களஞ்சியம்' என்னும் மகளிர் சுய உதவிக் குழுவுக்கு சின்னப்பிள்ளையை தலைவராக நியமித்தது. அதன்படி, அதிக வட்டிக்கு வெளியில் கடன் எடுத்து கஷ்டப்பட்ட பெண்கள், கடன்களை திரும்ப செலுத்த முடியாமல் மனக் கவலையில் ஆழ்ந்திருக்கும் பெண்கள் என அனைவரிடத்திலும் சென்று, சிறுசேமிப்பு பழக்கத்தை ஏற்படுத்தி அவர்களின் பொருளாதார நிலையை மேம்படுத்தினார் சின்னப்பிள்ளை. கிட்டத்தட்ட 2 ஆயிரத்து 589 சுய உதவிக் குழுக்களை உருவாக்கி கிராமப்புற பெண்களின் வாழ்வை வெற்றிகரமாக மாற்றியது மூலம் சமுதாய மேம்பாட்டிற்கு சின்னப்பிள்ளை முக்கியப் பங்காற்றி இருக்கிறார்.
சின்னப்பிள்ளையின் செயல்பாட்டை பாராட்டி கடந்த 2001-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மத்திய சமூக மற்றும் பெண்கள் நலத்துறையின் சார்பில் நடைபெற்ற விழாவில் அவருக்கு ‘ஸ்த்ரீ சக்தி புரஷ்கார்’ விருது வழங்கப்பட்டது. இந்த விழாவில் விருது வழங்கிய அப்போதைய பிரதமர் வாஜ்பாய், சின்னப்பிள்ளையின் காலில் விழுந்து ஆசி பெற்றது அனைவரின் மத்தியிலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
வாஜ்பாய் மறைவின் போது பேசிய சின்னப்பிள்ளை, “இந்த நாட்டோட பிரதமர் என் காலில் விழுந்தபோது எனக்கே பிரமிப்பாக இருந்தது. எந்த காலத்திற்கும் மறக்க முடியாத பெருமையை எனக்கு அவர் அளித்தவர் வாஜ்பாய். அப்படிப்பட்ட மனிதர் இறந்தபோது என் மனம் சொல்ல முடியாத வேதனையை அனுபவித்தது. உலகமே என்னை பாராட்ட வாஜ்பாய் தான் காரணம்” என வாஜ்பாய் இறப்பின் வேதனையை பகிர்ந்துகொண்டிருந்தார்.
கிராமப்புற பெண்களின் வாழ்வாதாரத்துக்காக சிறப்பாக சேவையாற்றி வரும் சின்னப்பிள்ளை பெருமாளுக்கு தமிழக அரசு சார்பில் கடந்த ஆண்டு அவ்வையார் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.