தமிழ்நாடு

ஜாதி பெருமையா..?..எஸ்.வி.சேகர் ட்வீட்டும்...பா.ரஞ்சித் பதிலும்..

ஜாதி பெருமையா..?..எஸ்.வி.சேகர் ட்வீட்டும்...பா.ரஞ்சித் பதிலும்..

rajakannan

ஜாதி பெருமை பேசியதாக ட்வீட் செய்த எஸ்.வி.சேகருக்கு இயக்குநர் பா.ரஞ்சித் ட்விட்டரில் பதில் அளித்துள்ளார்.

நீட் தேர்வால் மருத்துவ படிப்பில் சேர முடியாததால் தற்கொலை செய்துகொண்ட மாணவி அனிதாவுக்கு சினிமா இயக்குனர்கள் சங்கம் சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி சென்னை வடபழனியில் நடந்தது. இதில் இயக்குனர்கள், உதவி இயக்குனர்கள் பலர் அனிதா உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் அமீர் மற்றும் ரஞ்சித் இடையே நடைபெற்ற உரையாடலுடன் கூடிய விவாதம் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. மேலும் ராம் உள்ளிட்ட பல்வேறு இயக்குநர்கள் மிகவும் உணர்வு பூர்வமாகவும், சிந்தனை செய்யும் வகையிலும் பேசினர்.

இயக்குநர் மிஸ்கின், பா.ரஞ்சித் உள்ளிட்டோர் பேசிய கருத்துக்கள் குறித்து நடிகரும் பாஜகவைச் சேர்ந்தவருமான எஸ்.வி.சேகர் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்தார்.

அதில், இயக்குநர் ரஞ்சித் குறித்து, “தன்னை தமிழன் என்று சொல்லாமல் தலித் என்று சொல்லும் ரஞ்சித்."" தன் ஜாதியை பெருமையாக சொல்லும் ரஞ்சித்திற்கு வாழ்த்துக்களும் வணக்கங்களும்” என்று பதிவிட்டு இருந்தார்.

இதனையடுத்து, எஸ்.வி.சேகரின் கருத்துக்கு அவரது ட்விட்டர் பக்கத்தில், “தலித் என்பது சாதியல்ல, ஆரியம்- சாதியம் ஒழிக்கும் விடுதலைக் கருத்தியல்”  என்று ரஞ்சித் பதிலளித்தார்.