ப.சிதம்பரம், கச்சத்தீவு
ப.சிதம்பரம், கச்சத்தீவு pt web
தமிழ்நாடு

கச்சத்தீவு விவகாரம் - “2015 ஆம் ஆண்டு மத்திய அரசு அளித்த கடிதம் தெளிவுபடுத்தியுள்ளது” ப.சிதம்ரம்

PT WEB

மக்களவைத் தேர்தல் களம் சூடுபறக்கும் நிலையில் கச்சத்தீவு விவகாரம் மேலும் அனலைக் கூட்டியுள்ளது. இந்தியாவிடம் இருந்த கச்சத்தீவை, காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது அலட்சியமாக இலங்கையிடம் விட்டுக்கொடுத்துவிட்டதாக ஆர்டிஐ தகவல் அடிப்படையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார். இதைக்குறிப்பிட்டு பிரதமர் மோடி, காங்கிரஸை விமர்சித்திருந்த நிலையில், அதற்கு காங்கிரஸ் தலைவர்கள் எதிர்வினையாற்றி இருந்தனர்.

இதுதொடர்பாக நேற்று டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த வெளியுறவுத்துறை அமைச்சர், “1974ஆம் ஆண்டு காங்கிரஸ் அரசு இலங்கையுடன் மேற்கொண்ட ஒப்பந்தத்தின்படி கச்சத்தீவு இலங்கை வசம் கொடுக்கப்பட்து. 1976ஆம் ஆண்டு போடப்பட்ட மற்றொரு ஒப்பந்தத்தில் தமிழ்நாட்டு மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகள் பறிக்கப்பட்டது. கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டது தொடர்பாக அப்போதைய மாநில அரசுடன் கலந்தாலோசிக்கவில்லை என்று திமுக கூறுவதை ஏற்க முடியாது. காங்கிரஸ் அரசின் முடிவுக்கு அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி இசைவு தெரிவித்ததார்” என குறிப்பிட்டார்.

இந்நிலையில் முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் புதிய பதிவொன்றை பதிவிட்டுள்ளார். தனது எக்ஸ் தளத்தில், “கச்சத்தீவு பிரச்னையில் உண்மையில் என்ன நடந்தது என்று 27-1-2015 அன்று இந்திய அரசு தந்த கடிதம் தெளிவுபடுத்தியள்ளது. அன்று பிரதமராக இருந்தவர் நரேந்திர மோடி. அன்று வெளியறவுத் துறையில் உயர் அதிகாரியாக இருந்தவர் திரு ஜெய்சங்கர்.

அந்த 27-1-2015 ஆம் நாள் கடிதத்தைப் பற்றிக் கேட்டால், பாஜக தலைவர்கள் ஏன் நெளிகிறார்கள், நழுவுகிறார்கள்?

கச்சத்தீவு பற்றி உண்மைக்குப் புறம்பான காட்டமான அறிக்கைகளை வெளியிடும் பா ஜ க தலைவர்களுக்கு இலங்கையில் வாழும் 25 லட்சம் இலங்கைத் தமிழர்கள் மற்றும் 10 லட்சம் இந்தியத் தமிழர்களைப் பற்றிக் கவலையில்லை போலத் தெரிகிறது.

உங்கள் காட்டத்தை இலங்கையின் மீது காட்டி 35 லட்சம் தமிழர்களின் வாழ்க்கையைக் கேள்விக்குறியாக்கி விடாதீர்கள்” என தெரிவித்துள்ளார்.