ப.சிதம்பரம் கோப்புப் படம்
தமிழ்நாடு

"இந்த நாட்டில் ஜனநாயகம் பிழைத்திருக்குமா என்ற கவலை எனக்கு இருக்கிறது" - ப.சிதம்பரம்

“இந்த நாட்டில் ஜனநாயகம் பிழைத்திருக்குமா? இல்லையா? என்ற கவலை எனக்கு வந்திருக்கிறது” என்று காரைக்குடி அருகே நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் ப.சிதம்பரம் பேசினார்.

webteam

செய்தியாளர்: நைனா முகமது

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கோட்டையூர் ஸ்ரீ ராம் நகரில் சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்தை ஆதரித்து முன்னாள் மத்திய அமைச்சரும் தற்போதைய மாநிலங்களவை உறுப்பினருமான ப.சிதம்பரம் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர்...

“ஒரே நாடு என்பதை ஏற்றுக் கொள்ள முடியும். ஆனால், ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. வட மாநிலங்களையும், தென் மாநிலங்களையும் பிரித்திருப்பது கொள்கை போராட்டங்கள்தான். தென்னாடுகள் என்பது வெறி மற்றும் கலவர பேச்சுக்கள் இல்லாத ஜனநாயக பூமி. காமராஜர் கொண்டு வந்த மதிய உணவுத் திட்டத்தை போல், காலை சிற்றுண்டி திட்டத்தால் பல லட்சம் குழந்தைகள் இன்று உணவு உண்கிறார்கள்.

திமுகவின் மூன்று ஆண்டு கால ஆட்சியின் சாதனைகளை சொல்லி நான் உரிமையோடு கை சின்னத்திற்கு வாக்குகள் கேட்கிறேன். பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில், முதலமைச்சர்களை கைது செய்வது, அமைச்சர்களை கைது செய்வது என்பது சினிமாவில் கூட வந்தது கிடையாது, எந்த நாட்டிலும் இந்த விபரீதங்கள், பயங்கரவாதங்கள் நடப்பதில்லை.

ப.சிதம்பரம்

அனைவருக்கும் கல்வி திட்டத்தை கொண்டு வந்தது காமராஜர். கல்விக் கடன் திட்டத்தைக் கொண்டு வந்தது காங்கிரஸ் ஆட்சி. ஆனால் தற்போது நடப்பதையெல்லாம் பார்த்தால், இந்த நாட்டில் ஜனநாயகம் பிழைத்திருக்குமா? இல்லையா? என்ற கவலை எனக்கு வந்திருக்கிறது” என்று பேசினார்.