காஷ்மீர் விவகாரத்தை திசைதிருப்பவே, எனது தந்தையை கைது செய்துள்ளனர் என்று கார்த்தி சிதம்பரம் எம்.பி கூறியுள்ளார்.
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் நேற்று இரவு கைது செய்யப்பட்டார். அவரது வீட்டின் கதவுகள் திறக்கப்படாததால் சிபிஐ அதிகாரிகள், இல்லத்திற்குள் சுவர் ஏறி குதித்து சென்று கைது செய்த சம்பவம் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில், டெல்லியில் உள்ள ரோஸ் அவின்யூ நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் இன்று ஆஜர்படுத்தப் பட உள்ளார்.
இதற்கிடையே, சென்னையில் இருந்து டெல்லிக்கு இன்று காலை சென்ற கார்த்தி சிதம்பரம், செய்தியாளர்களிடம் பேசும்போது, ’’காஷ்மீர் விவகாரத்தை திசைதிருப்பவே கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கை சட்ட ரீதியாக எதிர்கொள்வோம். இந்த வழக்கு அரசியல் காழ்ப்புணர்ச்சியால் அரங்கேற்றப்பட்ட நாடகம். காங்கிரஸ் கட்சியை அச்சுறுத்தவும், என் தந்தை பெயரை கெடுக்கவும் முயற்சி செய்கின்றனர். டெல்லியில் திமுக இன்று நடத்தும் போராட்டத்தில் பங்கேற்பேன்’’ என்றார்.