தமிழ்நாடு

சர்ச்சைக்குரிய விளம்பரத்தை வெளியிட்டதற்காக ‘ஓயோ’ விடுதிக்கு சீல்

சர்ச்சைக்குரிய விளம்பரத்தை வெளியிட்டதற்காக ‘ஓயோ’ விடுதிக்கு சீல்

webteam

கோவையில் சர்ச்சைக்குரிய வகையில் இணைய விளம்பரம் செய்த ‘ஓயோ’ தங்கும் விடுதிக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

கோவை மாவட்டம் நவ இந்தியா பகுதியில் ‘ஓயோ சில்வர் லாட்ச்’ என்ற தங்கும் விடுதி அபார்ட்மெண்ட் இயங்கி வந்தது. இந்த அபார்மெட்ண்ட் சார்பில் வெளியிடப்பட்டிருந்த இணைய விளம்பத்தில், திருமணம் ஆகாமல் தங்கும் ஆண்கள், பெண்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என சர்ச்சைக்குரிய வகையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. எனவே அந்தத் தங்கும் விடுதி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் 24ஆம் தேதி மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்திருந்தனர்.

அந்தப் புகாரில், இதுபோன்ற இணைய விளம்பரம் சட்ட விரோத செயல்களுக்கு துணைப் போகும் வகையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அத்துடன் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் அதிகரிக்க காரணமாக அமையும் வகையில் இருப்பதாகவும் மாதர் சங்கத்தினர் குற்றஞ்சாட்டியிருந்தனர். 

இதையடுத்து அந்த அபார்ட்மெண்டை காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் ஆய்வு செய்து, மாவட்ட ஆட்சியரிடம் அறிக்கை அளித்தனர். இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் ராசாமணி பிறப்பித்த உத்தரவின்படி தெற்கு வட்டாட்சியர் தேவனாதன், சம்மந்தப்பட்ட தங்கும் விடுதியாக செயல்பட்ட அபார்ட்மெண்டிற்கு சீல் வைத்தார்.