தமிழ்நாடு

கோவையில் அதிகரிக்கும் கொரோனா: ஆக்சிஜன் படுக்கைகளுக்கான தட்டுப்பாடு நீடிப்பு

கோவையில் அதிகரிக்கும் கொரோனா: ஆக்சிஜன் படுக்கைகளுக்கான தட்டுப்பாடு நீடிப்பு

webteam

கோவையில் கொரோனா பாதிப்பு அதிகரித்துவரும் சூழலில், அங்கு ஆக்சிஜன் படுக்கைகளுக்கான தடுப்பாடு தொடர்ந்து நீடித்து வருகிறது.

கோவையில் நாளொன்றுக்கு 3,000-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பதிவாகி வருகிறது. நேற்று ஒரே நாளில் 3335 பேருக்கு கொரோனா பதிவு செய்யப்பட்டிருக்கிறது. தற்போது மொத்தமாக 24,342 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், இதுவரை கோவை மாவட்டத்தில் 943 பேர் பாதிக்கப்பட்டு பலியாகியுள்ளனர். தற்போதைய நிலையில் வீட்டு தனிமையில் 14,901 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

கோவை மாவட்டத்தில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, இஎஸ்ஐ மருத்துவமனை, பொள்ளாச்சி அரசு மருத்துவமனை, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் கோவை மாவட்டத்தில் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கொரோனா சிகிச்சை என்பது அளிக்கப்பட்டு வருகிறது.

இதைத் தவிர அரசு சார்பில் பாரதியார் பல்கலைக்கழகம் கொடிசியா வளாகம், அரசு வேளாண்மை பல்கலைக்கழகம், பொள்ளாச்சியில் உள்ள பி ஏ கல்லூரி, கோவை தடாகம் சாலையில் உள்ள ஜிசிடி தொழில்நுட்பக் கல்லூரி, போன்றவற்றிலும் கோவை மாவட்டத்தில் 67 தனியார் மருத்துவமனைகளிலும் 11 தங்கும் விடுதிகளிலும் நோய்க்கான சிகிச்சை என்பது அளிக்கப்பட்டு வருகிறது.

மொத்தமாக, இவற்றில் 12,844 சாதாரண படுக்கைகள் வசதிகள் தயாராக உள்ளன. அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் இல்லாத படுக்கையாக 889 படுக்கை வசதிகளில் நேற்று 545 படுக்கை வசதிகள் நிரப்பப்பட்ட நிலையில், 344 சாதாரண படுக்கை வசதிகள் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு ஆக்சிஜன் படுக்கைகள் 1112 படுக்கைகளும் நிரம்பியுள்ளன; 316 அரசு தீவிர சிகிச்சை பிரிவு படுக்கைகளும் நிரம்பியுள்ளன.

தனியார் மருத்துவமனை மற்றும் தனியார் சிகிச்சை மையங்களில் சாதாரண படுக்கைகளில் 2,954-ல் 2252 நிரம்பியுள்ளன. தனியார் ஆக்சிஜன் படுக்கைகளில் 2790-ல் 2667 நிரம்பியுள்ள நிலையில் 123 காலியாக உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.