செம்பரம்பாக்கத்தில் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அதிக பாரம் ஏற்றி வந்த சரக்கு லாரி டயர் வெடித்து சாலையில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சென்னை மவுண்ட் ரோட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் இருந்து பழைய இரும்பு சேனல்களை ஏற்றிக்கொண்டு, சரக்கு லாரி ஒன்று செம்பரம்பாக்கம் அருகே வந்தது. அப்போது லாரியில் அதிக பாரம் ஏற்றி வந்ததால் அழுத்தம் தாங்கமுடியாமல் எதிர்பாராத விதமாக திடீரென டயர் வெடித்து விபத்து ஏற்பட்டது.
இதில் லாரி தலைகுப்புற கவிழ்ந்து வண்டியில் ஏற்றிவந்த அனைத்து இரும்பு சேனல்களும் சாலையில் விழுந்தது. அதிர்ஷ்டவசமாக ஓட்டுனர் சாந்தகுமார் எந்த காயமும் இன்றி உயிர் தப்பினார். எனினும் இந்த விபத்து காரணமாக சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு காவல்துறையினர் கிரேன் உதவியுடன் லாரியை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரம் போராடி லாரியையும் இரும்பு பொருட்களையும் அப்புறப்படுத்தினர். அதிக பாரம் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.