தமிழ்நாடு

“கல்வி கிடைக்காததால் கல்யாணம் செய்தோம்” - பால்ய விவாகம் குறித்த ஓர் ஆய்வு

“கல்வி கிடைக்காததால் கல்யாணம் செய்தோம்” - பால்ய விவாகம் குறித்த ஓர் ஆய்வு

webteam

பெண் குழந்தைகள் இயல்பாக பள்ளிக்குச் சென்றிருந்தால் 80% குழந்தை திருமணங்கள் தமிழ்நாட்டில் தடுக்கப்பட்டிருக்கும் என்று ஆய்வுகள் மூலம் தகவல் கிடைத்துள்ளது.

தேசிய குடும்பநல ஆய்வு 2015-16ன் தகவலின்படி தமிழ்நாட்டில் 16% பெண் குழந்தைகள் 18 வயதுக்கு முன்பே திருமணமாகிவிடுவதாக தெரியவந்துள்ளது. ‘சமகல்வி இயக்கம்’ என்ற தன்னார்வுத் தொண்டு நிறுவனம் தமிழ்நாட்டில் ஒரு ஆய்வை நடத்தியுள்ளது. இந்த ஆய்வு தமிழ்நாட்டில் குழந்தை திருமணம் செய்துகொண்ட சுமார் 200 பெண்களிடம் சில விவரங்களை கேட்டுப் பெற்றுள்ளது. அதில் பல அதிர்ச்சிகர தகவல்கள் வெளிவந்துள்ளன.  

அதன்படி தமிழ்நாட்டில் பெண் குழந்தைகள் பள்ளிக்கு செல்லாததால்தான் குழந்தை திருமணத்திற்குள் தள்ளப்படுவதாக அதிர்ச்சி தகவல் ஒன்று தெரியவந்துள்ளது. அத்துடன் குழந்தை திருமணம் செய்துகொண்ட பெண்களில் 87.6% பேர் தங்களுக்கு தரமான பள்ளி வசதி கிடைக்காததால்தான் திருமணம் செய்ய அழுத்தம் தரப்பட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த ஆய்வில் பங்கேற்ற பெண்களில் 84.8% பேர் தங்களின் கிராமத்தில் உயர்க்கல்வி பயிலும் அளவுக்கான பள்ளிக்கூட வசதியே இருக்கவில்லை என்ற தகவலை பகிர்ந்து கொண்டுள்ளனர். 

மேலும் பள்ளிக்குச் செல்லும் போது முறையான பாதுகாப்பு கிடைக்காததால் 47.6% பெண்கள் பள்ளிக்குச் செல்வதை தவிர்த்தது தெரியவந்துள்ளது. அத்துடன் 10% பெண்கள் பள்ளிக்குச் செல்லும் வழியில் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதாகவும் தெரிவித்துள்ளனர். இளம் வயதிலே திருமணம் செய்துகொண்டததால் இந்தப் பெண்கள் உடல் அளவிலும் மனதளவிலும் பெரிய நெருக்கடிகளை சந்தித்து வருவதும் ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. 

இந்த ஆய்வின் மூலம் ஒரு அதிர்ச்சி தகவலும் கிடைத்துள்ளது. இதில் பங்குபெற்ற 80% பெண்களுக்கு 18 வயது பூர்த்தியான பின்பே சட்டபடி பெண்கள் திருமணம் செய்துகொள்ள முடியும் என்ற தகவலே இன்னும் இவர்களுக்கு போய்சேரவில்லை என்பதுதான் அது.