Governor R.N.Ravi
Governor R.N.Ravi pt desk
தமிழ்நாடு

"ராம ராஜ்ஜியத்தை நோக்கி செல்கிறது நம் பாரதம்" - ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

webteam

செய்தியாளர்: M.ராஜாராம்

கவிச்சக்கரவர்த்தி கம்பர் பிறந்த ஊரான மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா தேரிழந்தூர் கிராமத்தில் கம்பர் பெயரில் கம்பர் கோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு, தஞ்சை கோட்ட ஹிந்து ஆலயப் பாதுகாப்பு இயக்கம் சார்பில் நடைபெற்ற, ‘அயோத்தி ராமனும் தமிழ் கம்பனும்’ என்ற நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றார். நிகழ்ச்சியில் கம்பரின் பெருமைகளை நிலைநிறுத்த தொடர்ந்து செயலாற்றி வரும் பல்வேறு நபர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவித்தார்.

Governor R.N.Ravi

தொடர்ந்து, அனைவருக்கும் வணக்கம் என தமிழில் பேச்சைத் தொடங்கிய ஆளுநர் ஆர்.என்.ரவி, “ பாரதம் முழுவதும் ராம மயம் ஒலித்துக் கொண்டிருக்கிறது. ராமனின் அதிதீவிர பக்தரான கம்பன் பிறந்த மண்ணில் பேசுவதை பாக்கியமாக கருதுகிறேன். பழமை வாய்ந்த தமிழ் இலக்கியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை, புறநானூறு அகநானூறு அனைத்திலும் ராமரின் புகழ் ஒலித்துக் கொண்டே உள்ளது.

தமிழ் இலக்கியங்களை படிக்கும்போது, ஆச்சரியங்களை ஏற்படுத்துகிறது. நமது அரசியல் அமைப்பின் அடிநாதம் ராம ராஜ்ய தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது. நாம் ராம ராஜ்யத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம். கம்பரை பெருமைப்படுத்த ராமராஜ்யம் அவசியமானது. ராமரை தெரிந்து கொள்ளும் வகையில் கம்ப ராமாயணத்தை முதலில் தமிழில் அழகாக எடுத்துரைத்ததன் மூலம் சாதாரண மனிதன் மனதிலும் ராமர் பற்றிய எண்ணம் சென்றடைந்தது. அதனால்தான் பல்வேறு மொழிகளில் கம்பராமாயணம் மொழிபெயர்க்கப்பட்டது.

Students

நம் பாரத தேசம் அரசியலமைப்புகளை தாங்கிய நாடு அல்ல. பாரதம் என்பது ஒரே குடும்பம். இங்கு பல்வேறு மொழி கலாசாரம் பண்பாடு, நாகரிகம் கொண்ட மக்கள் ஒரே குடும்பமாக வாழ்ந்து வருவதற்கு அடிப்படை ராமன்தான். ராம ராஜ்ஜியத்தை நோக்கி நம் பாரதம் சென்றுகொண்டிருக்கும் சமயத்தில் கம்பரின் பெருமையை நிலைநாட்டுவது அவசியமாகிறது. பாரதத்தின் ஆன்மா ஸ்ரீராமர் என்றும் கம்பரின் புகழை உயர்த்திப் பிடிப்போம்” என்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார்.