தமிழ்நாடு

லஞ்சத்தை ஊக்குவிக்க ஓட்டுநர் உரிம சட்டமா?

லஞ்சத்தை ஊக்குவிக்க ஓட்டுநர் உரிம சட்டமா?

webteam

லஞ்சத்தை ஊக்கவிக்கும் ஓட்டுநர் உரிம சட்டத்தை திரும்ப பெறாவிட்டால் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். 

அசல் ஓட்டுநர் உரிமத்தை கையில் வைத்துக்கொள்ள வேண்டும் என்ற சட்டம் இன்று முதல் தமிழகத்தில் அமலுக்கு வந்துள்ளது. அவ்வாறு வைத்துக்கொள்ள தவறினால் சிறை அல்லது அபராதம் மற்றும் இரண்டுமே வழங்கப்படும் என போக்குவரத்துத் துறை எச்சரித்துள்ளது. ஆனால் அசல் ஓட்டுநர் உரிமத்தை கையில் வைத்திருப்பதால் அது தொலைந்து விட வாய்ப்புள்ளதாகவும், அவ்வாறு தொலைந்தால் மீண்டும் ஓட்டுநர் உரிமம் வாங்குவது அலைச்சலான செயல் என்றும் பொதுமக்கள் தரப்பில் பேசப்படுகிறது. இதனால் மக்கள் மத்தியில் இந்த சட்டத்தை பொருத்தவரையில் அதிருப்தியான சூழலே நிலவுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் அசல் ஓட்டுநர் உரிம சட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ள லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர், இந்த சட்டம் காவல்துறையினர் லஞ்சம் வாங்குவதை ஊக்குவிக்கும் வகையிலே அமையும் என்று குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் இந்த சட்டத்தை அரசு வாபஸ் பெறவில்லை என்றால் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

பொதுவாகவே சாலை ஓரங்களில் காவல்துறையினர் மடக்கினால் மிரண்டு ஓடும் வாகன ஓட்டிகள், இந்த சட்டத்திற்குப் பிறகு காவல்துறையினரை சாலையில் கண்டால் எவ்வாறு நடந்துகொள்வார்களோ என்ற கேள்வி தான் எழுகிறது.