மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வேதா நிலையம் இல்லத்தை நினைவில்லமாக்க அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா, 2016-ஆம் ஆண்டு மறைந்தார். சென்னையில் அவர் வசித்து வந்த போயஸ் தோட்ட இல்லம் நினைவு இல்லமாக்கப்படும் என்று, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 2017-ஆம் ஆண்டு அறிவித்தார். ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜெயலலிதாவின் உறவினரான தீபா, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதனிடையே ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வீட்டை, நினைவு இல்லமாக்குவதற்காக நிலத்தை கையகப்படுத்தும் பணிகளை தமிழக அரசு சமீபத்தில் தீவிரப்படுத்தியது. இதுகுறித்து வருவாய்த்துறை சார்பில் அறிவிப்பாணை ஒன்றும் வெளியானது. அதில், வேதா இல்லத்தில் தற்போது யாரும் வசிக்கவில்லை என்றும், அந்த நிலத்தை கையகப்படுத்துவதால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.. மேலும், போயஸ் தோட்ட இல்லம் அமைந்துள்ள நிலத்திற்கு அடியில் எந்த விதமான கனிம வளங்களும் இல்லை என உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் அறிவிப்பாணையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வேதா நிலையம் இல்லத்தை நினைவில்லமாக்க அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.