மகாராஷ்டிராவிலிருந்து இன்று காலை சென்னை வந்து சேரும் தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ், ஜல்லிக்கட்டிற்கான அவசரச் சட்டத்தை பிரகடனப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜல்லிக்கட்டிற்கான தமிழக அரசின் அவசரச் சட்டத்திற்கு மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, கலாசாரத்துறை, உள்துறை உள்ளிட்ட துறைகள் அனுமதியளித்தன. எனவே குடியரசுத் தலைவருக்கு அனுப்பவேண்டிய தேவையில்லாமல் அவசரச் சட்டம் தமிழக அரசுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து தமிழக அமைச்சரவை கூடி, அவசரச்சட்டத்திற்கு அனுமதியளித்து ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் அனுப்பி வைக்கும். மகாராஷ்டிராவிலிருந்து இன்று காலை சென்னை வந்து சேரும் ஆளுநர் வித்யாசாகர் ராவ், அவசரச் சட்டத்தை பிரகடனப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக அரசின் அவசரச் சட்டத்தில் காளைகளை காட்சிப்படுத்தக்கூடாத விலங்குகள் பட்டியலில் இருந்து நீக்க வழிவகை செய்யப்பட்டிருப்பதாக உள்துறை அமைச்சக வட்டங்களை மேற்கோள் காட்டி பிடிஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. முன்னதாக அவசரச் சட்டம் இயற்றுவதற்கு வசதியாக ஜல்லிக்கட்டு வழக்கில் ஒருவாரத்திற்கு தீர்ப்பு வழங்கப்படாது என உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது.