பழனி முருகன் கோவில்
பழனி முருகன் கோவில் PT
தமிழ்நாடு

பழனி முருகன் கோவிலில் இந்து அல்லாதவர் நுழைய தடை என்ற பதாகையை மீண்டும் வைக்க நீதிமன்றம் உத்தரவு!

webteam

அறிவிப்பு பதாகை ஏன் அகற்றப்பட்டது என்று கேள்வி எழுப்பிய நீதிபதி, தேவையற்ற சர்ச்சைகளை உருவாக்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

இந்து அல்லாதவர்கள் நுழைய தடை என்ற அறிவிப்பை மீண்டும் நிறுவ வேண்டும்!

பழனியைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் “திண்டுக்கல் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவில் உள்ளது. இந்து அறநிலையத்துறை ஆலய நுழைவு விதி 1947ஆம் ஆண்டின் படி இயற்றப்பட்ட சட்டத்தில், இந்து அல்லாத எந்த ஒரு சமயத்தினரும் இந்து கோவிலுக்குள் நுழைவதை தடுக்கின்றது. அதன்படி இந்து அல்லாத எவரும் கோவிலுக்குள் நுழையக்கூடாது என தடுக்கும் வண்ணம் இந்த சட்டம் அப்பொழுது நிறைவேற்றப்பட்டது. தெய்வத்தின் மீது நம்பிக்கை இல்லாத நபர்களும் மாற்று மதத்தை நம்புகிறவர்களும் திருக்கோவிலுக்குள் நுழைய வேண்டிய அவசியம் இல்லை.

பழனி முருகன் கோவில்

இவ்வாறு உள்ள சூழலில் பழனி தேவஸ்தானத்திலும், பழனி முருகன் கோவிலிலும் இந்து அல்லாத நபர்கள் நுழைய தடை என்று வைக்கப்பட்டிருந்த அறிவிப்பு பலகை தற்போதைய செயல் அலுவலரால் நீக்கப்பட்டுள்ளது. இது இந்து மதம் சார்ந்த மக்களின் நம்பிக்கைகளை புண்படுத்தும் வகையிலும், தேவையற்ற சர்ச்சைகளை உருவாக்கும் வகையிலும் உள்ளது. செயல் அலுவலர் அறிவிப்பு பலகையை நீக்கியதை தொடர்ந்து இந்து அல்லாத சிலர் கோவிலுக்குள் நுழைய முயற்சி செய்துள்ளனர். எனவே பழனி தேவஸ்தானத்திற்கு உட்பட்ட பழனி முருகன் மற்றும் உப கோயிலுக்குள் இந்து அல்லாதவர்கள் நுழைய தடை விதிக்க வேண்டும். இந்து அல்லாதவர்கள் கோவிலுக்குள் நுழைய தடை என்ற பதாகையை மீண்டும் வைக்க வேண்டும்” என உத்தரவிடக்கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார்.

ஏன் பதாகை நீக்கப்பட்டது என நீதிபதி கேள்வி?

இந்த மனு இன்று நீதிபதி ஸ்ரீமதி முன் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் அருண் சுவாமிநாதன் ஆஜராகி, இந்து அறநிலையத்துறை சட்டம் 1947 விதி 48ன் படி இந்து அல்லாதவர்கள் இந்து கோயிலுக்குள் நுழைவதற்கு தடைவிதிப்பதற்கான ஆணை தெளிவாக உள்ளது. எனவே பழனி கோவிலுக்குள் இந்து அல்லாதவர்கள் நுழைய தடை விதிக்க வேண்டும். இந்து அல்லாதவர்கள் நுழைய தடை என்ற பதாகையையும் மீண்டும் அதே இடத்தில் நிறுவ வேண்டும் என வாதிட்டார்.

மதுரை கிளை நீதிமன்றம்

இதனை பதிவு செய்த நீதிபதி, இந்து அல்லாதவர்கள் கோவிலில் நுழைய தடை என்ற பதாகை ஏன் அகற்றப்பட்டது என கேள்வி எழுப்பி, இந்து அல்லாதவர்கள் கோவிலில் நுழைய தடை என்ற பதாகையை மீண்டும் அதே இடத்தில் வைக்க உத்தரவிட்டார். தொடர்ந்து வழக்கு விசாரணையை இரண்டு வாரத்திற்கு ஒத்தி வைத்துள்ளார்.