தமிழ்நாடு

மீனாட்சியம்மன் கோயில் கடைகளை காலி செய்ய உத்தரவு

மீனாட்சியம்மன் கோயில் கடைகளை காலி செய்ய உத்தரவு

webteam

மீனாட்சியம்மன் கோயிலுக்குள் உள்ள நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து கடைகளிலிருந்தும் நாளை மதியம் 12 மணிக்குள் பொருட்களை காலி செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் கடைகாரர்கள் சங்கத்தின் தலைவர் ராஜூநாகுலு, உயர்நீதிமன்ற கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அதில்,"எங்கள் சங்கத்தில் 115 உறுப்பினர்கள் உள்ளனர். நாங்கள் மீனாட்சியம்மன் கோயிலில் மஞ்சள், குங்குமம், பூஜை பொருட்கள், செயற்கை நகைகள், இந்து மத புத்தகங்கள், பூ விற்பனை செய்கிறோம். கடைகளுக்கு மாதம் ரூ.2 லட்சம் வாடகை செலுத்துகிறோம். எங்களிடம் கூடுதல் வாடகை வசூலிக்கும் கோயில் நிர்வாகம் பாதுகாப்பு வசதி செய்ய நடவடிக்கை எடுப்பதில்லை. இரவு நேரத்தில் கோயில் முழுவதும் தலா ஒரு வாட்ச்மேன், எலெக்ட்ரீசன் பணியில் உள்ளனர்.

பிப். 2-ம் தேதி இரவு 10.20 மணிக்கு 72-வது கடையில் மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 19 கடைகள் எரிந்து சம்பலானது. வியாபாரிகள் விரைந்து செயல்பட்டதால் தீ உடனடியாக அணைக்கப்பட்டது. 

மின் கசிவுதான் விபத்துக்கு காரணம். விபத்து நடைபெற்ற போது மின் இணைப்பு துண்டிக்கப்படவில்லை. அப்போது எலக்ட்ரீசன் பணியில் இல்லை. அவர் பணியில் இருந்திருந்தால் தீ விபத்தை தடுத்திருக்கலாம்.

கோயில் நிர்வாகத்தின் தவறு தான் தீ விபத்துக்கு காரணம். இதனால் கோயில் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பல்வேறு அமைப்புகள் போராட்டங்கள் நடத்தி வருகின்றன. இதை சமாளிப்பதற்காக கோயிலிலுள்ள கடைகளை காலி செய்யும் நடவடிக்கையில் கோயில் நிர்வாகம் இறங்கியுள்ளது. இதனால் கடைகளை காலி செய்யும் நடவடிக்கைக்கு தடை விதித்தும், கோயில் கடைகளை காலி செய்யக்கூடாது என்றும் உத்தரவிட வேண்டும்" 
என மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த  நீதிபதி பாரதிதாசன் நாளை மதியம் 12 மணிக்குள் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து கடைகளிலிருந்தும் பொருட்களை காலி செய்து, கோயில் நிர்வாகம் குறிப்பிடும் இடத்தில் பாதுகாப்பாக வைத்திருக்கலாம். அதனை 3 வாரங்களுக்குள் உரிமையாளர்கள் எடுத்துச் செல்ல வேண்டுமென கூறி வழக்கை 3 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.