அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை போதைப்பொருள் குற்றவாளி ஜான் பிரிட்டோவுடன் தொடர்புபடுத்திய திமுக ஐடி விங் பதிவை அவதூறு எனக் குற்றம்சாட்டி, மு.க. ஸ்டாலின் வழிகாட்டுதலால் இது நடந்ததாக கூறி, எதிர்காலத்தில் இத்தகைய அவதூறு பரப்ப தடை விதிக்கவும், ஒரு கோடி ரூபாய் மானநஷ்ட ஈடு வழங்கவும் ஆதவ் அர்ஜூனா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
ரூ.258 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல் வழக்கின் முக்கியக் குற்றவாளியான ஜான் பிரிட்டோ என்பவர் அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவின் உறவினர் எனக் கூறி, கடந்த ஜூன் 8 அன்று திமுக ஐடி விங்கின் அதிகாரப்பூர்வ 'எக்ஸ்' பக்கத்தில் வெளியிடப்பட்டிருந்தது.
இவ்வாறு தனக்கு எதிராக அவதூறான செய்தி வெளியிட்டதற்காக ஒரு கோடி ரூபாய் மானநஷ்ட ஈடு வழங்க கோரி அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக தலைவர் ஸ்டாலின், திமுக ஐடி விங்க் எதிராக மனுத்தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், தனக்கெதிரான அவதூறு செய்தி பரப்பியதற்காக, மு.க ஸ்டாலின், திமுக ஐடி.விங்க், முன்னணி தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழ்கள், தொலைக்காட்சி சேனல்கள் நிபந்தனையற்ற மன்னிப்பு வெளியிட வேண்டும் என்றும், திமுக கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் வழிகாட்டுதலின் பேரிலேயே இது நடந்துள்ளதால், எதிர்காலத்தில் இதுபோன்ற அவதூறுகளைப் பரப்ப மு.க. ஸ்டாலின் மற்றும் திமுக ஐடி விங்கிற்கு நிரந்தரத் தடை விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இந்த மனு,நீதிபதி கே. கோவிந்தராஜன் திலகவதி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், போதைப்பொருள் குற்றவாளி ஜான் பிரிட்டோவிற்கும் அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், அமைச்சரின் உறவினர் பி. ஜான் பிரிட்டோ என்பவரின் பெயர் ஒற்றுமையைப் பயன்படுத்தி திமுக, அரசியல் உள்நோக்கத்தோடு அவதூறு பரப்பப்பட்டுள்ளதாகவும் வாதம் வைத்தார்.
இந்த வாதங்களைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி, இந்த மனு குறித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மற்றும் திமுக ஐடி விங் ஆகியோர் வரும் செப்டம்பர் 15ம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தார்.