வங்ககடலில் குறைந்த காற்றழுத்த பகுதி நிலவி வருவதால் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள பல்வேறு பகுதிகளில் இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது. இத்தகைய சூழலில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. சென்னையிலும் பிற்பகலில் இருந்து வானம் மேகமூட்டத்துடனும் சில பகுதிகளில் சாரலும் இருந்ததைப் பார்க்க முடிந்தது. இத்தகைய சூழலில் மழை தொடர்பான முக்கிய செய்திகளைப் பார்க்கலாம்.
தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில், வரும் 22ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து, மேற்கு - வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து அடுத்த 48 மணிநேரத்தில் மேலும் வலுப்பெறக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக, தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் காவிரி படுகை மாவட்டங்களில் வரும் 21, 22 ஆகிய தேதிகளில், கன முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டின் 7 மாவட்டங்களுக்கு, இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்களில்டங்களிலிலும், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களுக்கும் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. காரைக்காலிலும் மிக கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
தமிழ்நாட்டின் 9 மாவட்டங்களிலும், புதுவையிலும் இன்று கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அரியலூர், கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களிலும், இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும் என, வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதேபோல், புதுவையில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் நாளை முதல் 23 ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக நாளை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலும், சிவகங்கை, விருதுநகர், தென்காசி மற்றும் தேனி மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 19 மற்றும் 20 ஆம் தேதிகளில், மயிலாடுதுறை மற்றும் கடலூர் மாவட்டங்களில், கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.