ராஜன் செல்லப்பா, ஓபிஎஸ், செல்லூர் ராஜூ, ஆர்.பி. உதயகுமார் pt web
தமிழ்நாடு

"எடப்பாடியார் காலிலே கூட விழுறோம்!! இல்லனா.. அந்த கட்சி ஆட்சிக்கு வரும்" அதிமுகவில் பரபரப்பு

”எடப்பாடியார் காலிலே கூட விழுறோம்... இல்லனா.. அந்த கட்சி ஆட்சிக்கு வரும்”.. ஓபிஎஸ் ஆதரவாளர் பரபரப்பு பேச்சு

Uvaram P

அதிமுகவின் உரிமை மீட்புக் குழு கூட்டத்தில் பேசிய நிர்வாகி, எடப்பாடியார் காலிலே கூட விழுகிறோம், எங்களை தயவு செய்து சேர்த்துக்கொள்ளுங்கள் என்று கோரிக்கை விடுத்தது பேசுபொருளாக மாறியுள்ளது. அதோடு, ஓபிஎஸ்ஸை இணைத்துக்கொள்ளாமல் போனால், 2026 ஒரு கட்சி ஆட்சி அமைக்கும் என்று அவர் சூசகமாக பேசியதால் கூட்டமே பரபரப்பானது.. என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.

ஓபிஎஸ்

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் அஇஅதிமுக உரிமை மீட்பு குழு சார்பில், காஞ்சிபுரம் அடுத்த கருக்குபேட்டை பகுதியிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.

மாவட்ட செயலாளர் ஆர்.வி.ரஞ்சித்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், முன்னாள் அமைச்சரும் இணை ஒருங்கிணைப்பாளருமான வைத்திலிங்கம், துணை ஒருங்கிணைப்பாளர் பி.எச்.பாண்டியன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர். அதோடு, சிறப்பாக பணியாற்றிய நிர்வாகிகளுக்கு வாட்ச்சை பரிசாக வழங்கி கெளரவித்து, பல்வேறு ஆலோசணைகளை வழங்கி சிறப்புரையாற்றி பேசினர்.

இந்த நிலையில் நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் ஆர்.வி.ரஞ்சித்குமார் 10 தீர்மானங்களை நிறைவேற்றி பேசினார். அப்போது, “அதிமுகவுடன் இணைவதற்கான அனைத்து வகையான போராட்டங்களை நாங்கள் முன்னெடுத்து விட்டோம்.. ஆனால் இறுதியாக இது குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் எடப்பாடி பழனிச்சாமிக்கு மட்டுமே உள்ளது.. ஆகையால் எடப்பாடியார் காலிலே கூட விழுகிறோம், எங்களை தயவு செய்து சேர்த்துக்கொள்ளுங்கள்.. அதிமுகவுடன் ஓபிஎஸ்யை இணைத்துக் கொள்ளாமல் போனால், வருகிற 2026-ல் மூன்றெழுத்து உள்ள கட்சிதான் தமிழகத்தில் ஆட்சி அமைக்கும்” என்று பேசினார். கூட்டத்தில் தவெக குறித்து பேசிய ரஞ்சித்குமார், அதனைத் தொடர்ந்து, மூன்றெழுத்து கட்சி ஆட்சி அமைக்கும் என்று சூசகமாக பேசியது கூட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

சில தினங்களுக்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசி இருந்த ஓபிஎஸ், அதிமுக தொண்டர்கள் ஒன்றுபட வேண்டும்.. எந்த பதவியும் இல்லாமல் கட்சியில் இணைய தயார் என ஏற்கனவே அறிவித்துள்ளேன் என்று பேசியிருந்த நிலையில், மாவட்டச் செயலாளரின் இன்றைய பேச்சு கவனம் ஈர்த்துள்ளது.