தமிழ்நாடு

'ஒன்றரை கோடி தொண்டர்கள் ஓபிஎஸ் பக்கமே'- கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி

'ஒன்றரை கோடி தொண்டர்கள் ஓபிஎஸ் பக்கமே'- கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி

JustinDurai

பொதுக்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு செயலாளர்களை மட்டும் வைத்துக்கொண்டு கட்சி நடத்திவிட முடியாது எனக் கூறுகிறார் ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி.  

கடந்த ஜூலை 11-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுக் கூட்டத்துக்கு தடை கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பில் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்ற தனி நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், ஜூலை 11ஆம் தேதி நடந்த பொதுக்குழு செல்லாது என்றும், அதிமுகவில் ஜூன் 23ஆம் தேதிக்கு முன்பு இருந்த நிலையே தொடர வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் உயர் நீதிமன்ற நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர்மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று தீர்ப்பளித்தனர். அதிமுக பொதுக்குழு செல்லும் என்று தீர்ப்பளித்தும், இந்த வழக்கில் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தும் உத்தரவிட்டனர். அதிமுக பொதுக்குழு தொடர்பான தனி நீதிபதி உத்தரவு ரத்து செய்யப்பட்டதால் எடப்பாடி பழனிசாமி தரப்பு ஆதரவாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இது இபிஎஸ் தரப்புக்கு கிடைத்த வெற்றியாகவே பார்க்கப்படுகிறது. உயர் நீதிமன்ற தீர்ப்பு ஓபிஎஸ்க்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இந்த தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி, ''தீர்ப்பு நகல் கிடைத்ததும் சட்ட ஆலோசகர்களின் கருத்தைக் கேட்டு அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஓ.பன்னீர்செல்வம் முடிவு எடுப்பார். ஒன்றரை கோடி தொண்டர்கள் ஓபிஎஸ் பக்கமே இருக்கின்றனர். அதனால் நாங்கள் பலமாக  இருக்கிறோம். பொதுக்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு செயலாளர்களை மட்டும் வைத்துக்கொண்டு கட்சி நடத்திவிட முடியாது. தொண்டர்களின் முடிவே இறுதியானது'' என்று கூறியுள்ளார்.

இதையும் படிக்க: `இந்த தீர்ப்பு இபிஎஸ்-க்கு அரசியல் வெற்றியாக அமையும்’- அரசியல் விமர்சகர் கருத்து