தமிழ்நாடு

"இயலாமை, ஏமாற்றம், தோல்வி பயத்தால் ஓபிஎஸ் உளறுகிறார்" - முன்னாள் அமைச்சர் ஆர்பி. உதயகுமார்

webteam

இயலாமை ஏமாற்றம் தோல்வி பயத்தால் ஓபிஎஸ் உளறுகிறார் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.

தமிழக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரின் மகளுக்கு வரும் 23-2-23 அன்று மதுரை மாவட்டம் டி.குன்னத்தூரில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கோவிலில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் திருமணம் நடைபெற உள்ளது. இதுதொடர்பான பணிகளில் இருந்த ஆ.பி.உதயகுமார் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவரிடம், ஓபிஎஸ் சென்னையில் நடத்திய மாவட்டச் செயலாளர்களின் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்துள்ளாரே என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ஆர்.பி.உதயக்குமார், “விவாதம் செய்வது, குதர்க்கமாக பேசுவது, கடிதம் எழுதுவது, இதெல்லாமே இயலாமையின் வெளிப்பாடுதான். நாகரிகம் இல்லாமல் பேசுவது, அநாகரிகமான பேச்சுக்கள், பண்பாடற்ற பேச்சுக்கள் இவையெல்லாமே இயலாமையாலும், விரக்தியாலும், ஏமாற்றத்தின் வெளிபாடு தோல்வியின் வெளிபாடு” என குற்றம் சுமத்தினார்.

மேலும் தமிழக அரசின் பொங்கல் பரிசு குறித்த கேள்விக்கு பதில் கூறிய அவர், “பொங்கல் திருநாள் என்பது தாய்த் தமிழர்களின் திருநாள் இதில் இந்து, இஸ்லாமியர்கள் கிறிஸ்தவர்கள் என அனைவருமே ஒன்றாக கொண்டாட கூடிய தமிழர் திருநாள். ஆகவே புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் துவக்கிவைத்த பொங்கல் பரிசு திட்டத்தை புரட்சித்தலைவி அம்மா ஆட்சியில் தொடர்ந்தார், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் 2,500 ரூபாய் ரொக்கமாகவும் கரும்பு, வெள்ளம், முந்திரி, பச்சரிசி, பருப்பு, நெய் உள்ளிட்டவைகளை 2 கோடியே 8 லட்சம் அட்டைதாரர்களுக்கு வழங்கினோம்.

கரும்பு கைத்தறி இவைகளை அரசே நேரடியாக கொள்முதல் செய்து ஒரு கோடியே 87 லட்சம் பேருக்கு விலை இல்லா வேஷ்டியும் ஒரு கோடியே 87 லட்சம் பேருக்கு விலை இல்லா சேலையும் வழங்கினோம் இதனால் ஒரே திட்டத்தில் விவசாயிகளுக்கும் நெசவாளர்களுக்கும் வாழ்வாதாரம் பெருகியது. ஆனால் தற்போதைய திமுக அரசு, அறிவிப்பில் கரும்பு இல்லை. ஆகவே கரும்பு விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர். தற்போது குடும்ப அட்டைகளின் எண்ணிக்கையை கூட குறைத்துள்ளதாக வெளியாகும் தகவல் வேதனையானதாக உள்ளது.

இந்த ஆண்டு மேம்படுத்தப்பட்ட கைத்தறி என விளம்பரப்படுத்தி இருக்கின்றனர். ஆனால் எப்படி கொடுக்க இருக்கிறார்கள் எனத் தெரியவில்லை. ஏனென்றால் கடந்த ஆண்டு மிகப்பெரிய குளறுபடியாக பொங்கள் பரிசு வழங்கப்பட்டு பெரும் விமர்சனத்துக்கு ஆளாகினார்கள். அதை சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டிருந்தார்.

பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் ரொக்கம் என்பது யானை பசிக்கு சோளப்பொரி போன்றது தான்” என விமர்சனம் செய்தார்.