எடப்பாடி பழனிசாமியின் செயல்பாடுகளால் அதிமுக பல இன்னல்களை சந்தித்து வருவதாக, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஜெயபிரதீப் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட வீடியோ செய்தியில், ஒரு சில நபர்கள் சுயநலத்தால் கட்சியை பிளவுபடுத்தி பிரிவினையை ஏற்படுத்துவதாகவும், எடப்பாடி பழனிசாமியை விட அதிக செல்வாக்கு யாருக்குமே இருக்கக்கூடாது என அவர்கள் எண்ணுவதாகவும் தெரிவித்துள்ளார்.
தான் சொல்வது தான் சரி என செயல்பட்டுக்கொண்டிருக்கும் எடப்பாடி பழனிசாமி, சரி, தவறு என கேள்வி கேட்போரை கட்சியில் இருந்து நீக்கி வருவதாக குற்றஞ்சாட்டி உள்ளார். தொண்டர்கள் மத்தியில் ஓ.பன்னீர்செல்வம் குறித்து பொய்யான தகவல்கள் பரப்பப்படுவதாக குறிப்பிட்ட ஜெயபிரதீப், அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதே தங்கள் எண்ணம் என்று தெரிவித்தார்.
ஓ.பன்னீர்செல்வத்தை காயப்படுத்தியதால் எடப்பாடி பழனிசாமி சாதித்தது என்ன என கேள்வி எழுப்பிய அவர், எடப்பாடி பழனிசாமியின் செயல்பாடுகளால் திமுக மிகவும் வலுவடைந்து வருவதாகவும், மிகப்பெரிய பாதாளத்தை நோக்கி அதிமுக சென்றுகொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.