தமிழ்நாடு

இபிஎஸ் கடிதத்திற்கு என்ன பதில்? அதிமுக எம்.பி.யாக இன்னமும் தொடர்கிறாரா ஓபிஎஸ் மகன்?

Sinekadhara

அதிமுகவிலிருந்து ஓ.பி ரவீந்திரநாத்தை நீக்கிய கடிதம் தொடர்பாக மக்களவை சபாநாயகர் எந்த முடிவும் எடுக்கவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுகவின் ஒரே மக்களவை உறுப்பினராக ஓ.பி ரவீந்திரநாத் இருந்துவருகிறார். இந்நிலையில் அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சி பிரச்னையால் ஓ.பி ரவீந்திரநாத் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில் ஓ.பி ரவீந்திரநாத்தை அதிமுக எம்.பியாக கருதக்கூடாது என எடப்பாடி பழனிசாமி தரப்பில் மக்களவை சபாநாயகருக்கு கடிதம் எழுதப்பட்டிருந்தது. இதற்கு ஓ.பி.ரவீந்திரநாத் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் அதிமுகவிலிருந்து ஓ.பி ரவீந்திரநாத்தை நீக்கிய கடிதம் தொடர்பாக மக்களவை சபாநாயகர் எந்த முடிவும் எடுக்கவில்லை என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். அதிமுகவுக்கு ஒரு மக்களவை உறுப்பினர் இருப்பதாக மக்களவை இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களவை ஆவணங்களில் ஓ.பி ரவீந்திரநாத் அதிமுக உறுப்பினர் என்பதில் எந்த மாற்றமும் இல்லை என்பது தெளிவாகிறது. இபிஎஸ் கோரிக்கையை சபாநாயகர் ஏற்றுக்கொண்டால் அதிமுகவுக்கு மக்களவையில் உறுப்பினர் யாரும் இல்லை என்ற நிலை ஏற்படும்.

நாடாளுமன்ற விதிகள் படி இபிஎஸ் தரப்பு கோரிக்கையை சபாநாயகர் முடிவு செய்வார் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், ரவீந்திரநாத் நீக்கம் குறித்து இழுபறி நிலவுகிறது.