வீடு விவகாரம் தொடர்பாக நல்லகண்ணுவுடன் துணை முதலமைச்சர் ஓபிஎஸ் தொலைபேசியில் பேசியுள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு. சுதந்திர போராட்டம் தொடங்கி, மாணவர் பருவத்திலேயே அரசியல் பிரவேசம் செய்தவர். நீண்ட காலமாக அரசியல் களத்தில் பயணித்து வருகிறார். மக்களின் பல்வேறு பிரச்னைகளுக்காக களத்திலும், நீதிமன்றத்திலும் போராடி வருகிறார். தமக்கென ஒரு சொந்த வீடு இல்லாத காரணத்தால், கடந்த 2006-ம் ஆண்டு முதல், சுமார் 12 ஆண்டுகளுக்கும் மேலாக சென்னை தியாகராய நகரில் உள்ள வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் குறைந்த வாடகையில் வசித்து வந்தார்.
இதனிடையே அவர் வசித்து வந்த இடத்தில் புதிய திட்டம் வருவதாக கூறி குடியிருப்பு வாசிகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. குடியிருப்பு வாடகை வீடுகளை காலி செய்யுமாறு அரசு உத்தரவிட்டதை அடுத்து, மாற்று வீடு ஏதும் கேட்காமல் அங்கிருந்து காலி செய்துக்கொண்டு வெளியேறினார் நல்லகண்ணு. இதனையடுத்து அவருக்கு உடனடியாக வீடு வழங்க வேண்டும் என ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தினர்.
இந்நிலையில் வீடு விவகாரம் தொடர்பாக துணை முதலமைச்சர் ஓபிஎஸ், நல்லகண்ணுவிடம் தொலைபேசியில் பேசியுள்ளார். இதுகுறித்து பேசியுள்ள நல்லகண்ணு, வீடு ஒதுக்குவது தொடர்பாக அரசு கொள்கை முடிவு எடுத்து அறிவிக்கும் என ஓபிஎஸ் தெரிவித்ததாக கூறினார்.