தமிழ்நாடு

துணை முதல்வரின் பெயர் ஏன் இடம்பெறவில்லை? - விளக்கம் அளித்த அமைச்சர் ஜெயக்குமார்

kaleelrahman

அரசு நிகழ்ச்சி அழைப்பிதழில் துணை முதல்வரின் பெயர் இடம்பெறாதது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.

 அதிமுகவின் செயற்குழு கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இதில் பல காரசார விவாதங்கள் நடைபெற்றதாக சொல்லப்படுகிறது. கூட்டம் முடிந்ததும் செய்தியாளர்களிடம் பேசிய கே.பி.முனுசாமி வருகிற அக்டோபர் 7ஆம் தேதி அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்று அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து நேற்று முதலமைச்சர் பழனிசாமி கொரொனா நடவடிக்கை குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதில் துணை முதல்வர் பன்னீர்செல்வம் கலந்துகொள்ளாமல் தனது ஆதரவாளர்களுடன் அவரது வீட்டில் ஆலோசனையில் ஈடுபட்டார்.

இந்நிலையில் சென்னை மாநகராட்சி சார்பில் இன்று நடைபெற்ற திடக்கழிவு மேலாண்மை  திட்டத்தை முதலமைச்சர் துவக்கி வைப்பதற்கான அழைப்பிதழ் அச்சிடப்பட்டுள்ளது. அதில் துணை முதல்வரின் பெயர் இடம்பெறவில்லை .இதைத் தொடர்ந்து பல கேள்விகள் எழுந்தன.

இதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், பிரதான நிகழ்ச்சிகளில் மட்டுமே துணை முதல்வரின் பெயர் இருக்கும் .இது சென்னை மண்டலம் அளவிலான நிகழ்ச்சி என்பதால் அவரது பெயர் இடம்பெறவில்லை. துணை முதல்வர் பெயர் இடம்பெறாததற்கு எந்த உள்நோக்கமும் இல்லை என கூறினார்.