சசிகலா மற்றும் டிடிவி தினகரனை எந்தவித நிபந்தனையுமின்றி கட்சியில் சேர்த்துக் கொள்ள ஓபிஎஸ் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக படுதோல்வியை சந்தித்துள்ளது. அதிமுக தோல்விக்கு கட்சி பிளவு தான் காரணம் என்று பொதுமக்கள் மத்தியிலும், கட்சி தொண்டர்கள் மத்தியிலும் பரவலான பேச்சு அடிபட்டது. இந்நிலையில் சசிகலா மற்றும் டிடிவி.தினகரன் ஆகியோர் சேர்ந்தால் மட்டுமே கட்சியை பலப்படுத்த முடியும் என்று தொண்டர்கள் வலியுறுத்தி வந்த நிலையில் தேனி மாவட்டத்தில் அதற்கான முதல் மணி அடிக்கப்பட்டு உள்ளது.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கைலாசபட்டியில் உள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் பண்ணை வீட்டில், தேனி மாவட்ட அதிமுகவின் அனைத்து நிலை நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சசிகலா மற்றும் டிடிவி தினகரனை மீண்டும் அதிமுகவில் சேர்த்துக் கொள்வது பற்றி ஆலோசிக்கப்பட்டது.
சசிகலா மற்றும் டிடிவி தினகரனை எந்தவித நிபந்தனையுமின்றி அதிமுகவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று தேனி மாவட்ட அதிமுக சார்பாக வரும் 5ம் தேதி தீர்மானம் நிறைவேற்றி தலைமைக்கு அனுப்ப ஓபிஎஸ் அறிவுறுத்தியுள்ளதாகவும், அனைத்து மாவட்டங்களிலிருந்தும் இதுபோல தீர்மானம் நிறைவேற்றி தலைமைக்கு அனுப்பப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.