தமிழ்நாடு

`அன்புச் சகோதரர் இபிஎஸ் உடன் இணைந்து செயல்படவே விரும்புகிறோம்”- ஓபிஎஸ் அழைப்பு!

நிவேதா ஜெகராஜா

`அதிமுகவில் பொதுச்செயலாளரை தேர்வு செய்ய நடந்த பொதுக்குழு செல்லாது’ என நேற்றைய தினம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வெளியான தீர்ப்பு குறித்து, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் சில நிமிடங்களுக்கு முன் செய்தியாளர்களை சந்தித்தார். சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள தனது இல்லத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்திருந்தார்.

அப்போது பேசிய அவர், “தொண்டர்களுக்கான இயக்கமாக உருவாக்கப்பட்டது அதிமுக. 30 ஆண்டுகாலம் அதிமுகவை கட்டிக்காத்தவர் ஜெயலலிதா. அவர் தலைமையில் அதிமுக ஒன்றுபட்டபோது அதை வீழ்த்த யாராலும் இயலவில்லை. சொல்லப்போனால் அதிமுக ஒன்றுபட்டு ஜனநாயகரீதியில் தேர்தல்களை சந்தித்தபோது அதை வீழ்த்த இயலவில்லை என்பது பலமுறை நிரூபணம் ஆகியுள்ளது. அதன்படியே ஜெயலலிதா காட்டிய வழியில் நாங்களும் பயணத்தைத் தொடர்ந்து வருகிறோம். இடையில் ஏற்பட்ட பிரச்னையால் அதிமுகவில் அசாதாரண சூழல் ஏற்பட்டிருக்கிறது.

வேற்றுமையை மனங்களில் இருந்து அகற்றி விட்டு அதிமுக ஒன்றுபட வேண்டும். அதிமுகவினர் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். நடப்பவை நல்லவையாக இருக்க வேண்டும். இப்போதும், அதிமுக ஒன்றுபட வேண்டும் என்பதே தொண்டர்களின் விருப்பமாக இருப்பதாக தகவல் வந்து கொண்டிருக்கிறது. அதை கருத்தில் கொண்டு, இரட்டை தலைமைக்கு எங்கள் தரப்பிலிருந்து அழைப்பு விடுக்கிறோம். அதிமுகவில் மீண்டும் ஒற்றுமையுடன் இணைந்து செயல்பட வருமாறு எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுப்பதில் தயக்கமில்லை. ஏனெனில் எடப்பாடி பழனிசாமியும் நானும் இணைந்து சிறப்பான பணிகளை செய்தோம்.

அதிமுகவில் `இரட்டைத் தலைமை’ என்பதெல்லாம் எனக்கு பிரச்னையில்லை. நாங்கள் கூட்டுத் தலைமையாக செயல்படுவோம். உறுப்பினர் சேர்க்கைக்குப் பிறகு தேர்தல் மூலம் ஈபிஎஸ்சும் நானும் அதிமுக நிர்வாகிகளாக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டோம். அப்படி தேர்வான அன்புச் சகோதரர் எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்து செயல்பட தயாராகவே உள்ளோம். மனக்கசப்புகளை எல்லாம் மறந்து அதிமுகவின் நலனுக்காக அனைவரும் ஒன்றுப்பட வேண்டும் என்பதே விருப்பமும் நோக்கமும்” என்றார்.

பேட்டியின் போது, `அன்புச் சகோதரர் எடப்பாடி பழனிச்சாமி’ என்று கூறி அவருக்கும் அவர் தரப்பு ஆதரவாளர்களும் அழைப்பு விடுத்தார் ஓ பன்னீர்செல்வம். மேலும் பேசிய அவர், “யார் வந்தாலும் கட்சியில் இணைத்துக்கொள்வோம். அவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்படுகிறது. கட்சிக்கு உழைத்தவர்கள் யாராக இருந்தாலும் இணைக்கலாம். யாராக இருந்தாலும் என்ற வார்த்தையில் சின்னம்மாவும், டிடிவி தினகரனும் இருக்கின்றனர் ” என்றார். தொடர்ந்து மதுரை சென்று சொந்த ஊரான பெரியகுளம் செல்கிறார் ஓபிஎஸ்.

ஓபிஎஸ், இபிஎஸ்-க்கு அழைப்பு விடுத்த இதே நேரத்தில், இபிஎஸ் தரப்பு நேற்றைய உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து முறையீடுக்கு சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.