EPS OPS
EPS OPS File image
தமிழ்நாடு

“நாடாளுமன்ற தேர்தலில் உறுதியாக இரட்டை இலை சின்னத்தில்தான் போட்டியிடுவோம்” - ஓபிஎஸ் நம்பிக்கை

webteam

புதுக்கோட்டை மாலையீடு அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஓபிஎஸ் அணி சார்பில், ‘அதிமுக தொண்டர்களின் உரிமை மீட்புக் குழு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்’ நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அந்த அணியை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் வைத்தியலிங்கம், குபகிருஷ்ணன், சட்டமன்ற உறுப்பினர் மனோஜ் பாண்டியன், பெங்களூர் புகழேந்தி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ரத்ன சபாபதி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

ஓபிஎஸ் - ஓ பன்னீர்செல்வம்

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ் பேசுகையில்...

“தலைசிறந்த ஆட்சியை நடத்திக் காட்டிய பெருமை பிரதமர் மோடியை சாரும்”

“ஒன்றரை கோடி தொண்டர்களின் உரிமையை அராஜகத்தின் மூலமும் வன்முறையின் மூலமும் தடுக்கின்ற எடப்பாடி பழனிசாமியை தொண்டர்கள் விரட்டியடிப்பார்கள்.

பத்திரிகையாளர்களிடம் சொல்லிவிட்டுதான் நாங்கள் கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்துவோம், தலைசிறந்த ஆட்சியை நடத்திக் காட்டிய பெருமை பிரதமர் மோடியை சாரும். அதற்காகதான் 200 வளர்ந்த நாடுகள் மோடியின் நிர்வாகத் திறமையை பாராட்டுகின்றன”

உத்தரப்பிரதேசத்தில் கூட சிறுபான்மையின மக்கள் பாஜக மீது நம்பிக்கை வைத்துள்ளார்கள்”

“தமிழ்நாட்டில் சிறுபான்மை மக்களுக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை. அசம்பாவிதம் கொடுமைகள் நடக்கவில்லை. உத்தரப்பிரதேசத்தில் கூட சிறுபான்மையின மக்கள் பாஜக மீது நம்பிக்கை வைத்து அவர்களை வெற்றியடைய வைத்ததுதான் வரலாறு. நாடாளுமன்ற தேர்தலை பொருத்தவரை இந்திய அளவில் தேசிய கட்சியாக தனி பெரும்பான்மையுடன் வரக்கூடிய நிலைமை பாஜகவுக்கு மட்டுமே உள்ளது. அதனால் நாடாளுமன்ற தேர்தலில் தேசிய கட்சிதான் தலைமை வகிக்கும். பாஜக தலைமையிலேயே நாடாளுமன்ற தேர்தலை சந்திப்போம்“

Sasikala

சசிகலாவுடன் அரசியல் பேசவில்லை”

“சட்டமன்ற தேர்தலில்தான் மாநில கட்சி தலைமை வகிக்கும். அதன்படிதான் இந்த தேர்தலை சந்திக்க உள்ளோம். பொதுவாக தேசிய ஜனநாயக கூட்டணியில்தான் அங்கம் வகிக்கின்றோம். அண்ணா நினைவு தினத்தன்று சசிகலாவை சந்தித்தது மரியாதை நிமித்தமாகதான்; அரசியல் பேசவில்லை. 64 இஸ்லாமிய சிறைவாசிகளை விடுவிக்க ஆளுநர் ஒப்புதல் கொடுத்துள்ளது வரவேற்கக் கூடியது. இரட்டை இலை சின்னம் கிடைக்காது என்ற நிலை வரும் போது, எந்த சின்னத்தில் நிற்பது என்று பார்த்துக் கொள்ளலாம்”

மோடியா, லேடியா என்று ஜெயலலிதா கூறியதை தற்போது பேச முடியுமா?”

“பத்தாண்டு காலம் சிறப்பாக ஆட்சி செய்ததால் மோடிதான் ஆட்சிக்கு வர வேண்டும் என்று அனைவரும் எண்ணுகின்றனர். மோடியா, லேடியா என்று பத்தாண்டுகளுக்கு முன்பு ஜெயலலிதா கூறியதை தற்போது பேச முடியுமா? ஓபிஎஸ் டிடிவி தினகரன் சசிகலா ஆகியோர் ஒன்றிணைய வேண்டும் என்று அதிமுக தொண்டர்கள் விரும்புகின்றனர். கொடநாடு கொலை கொள்ளை சம்பவம் நடந்தபோது தர்மயுத்தம் நடத்திக் கொண்டிருந்தோம். அதற்காக அப்போது கண்டன அறிக்கையும் விட்டிருந்தோம். அப்போது எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்ததால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினோம்“

EPS

அதிமுகவில் 2 கோடி தொண்டர்கள் உள்ளதாக எடப்பாடி பழனிசாமி கூறுவது சுத்த பொய்”

“எங்கள் தலைமையில் உள்ள உரிமை மீட்புக் குழுவில் உள்ள தொண்டர்கள், பொதுமக்கள் பாஜகவுக்குதான் வாக்களிப்பார்கள். ஐந்து இடங்களா, 10 இடங்களா, 30 இடங்களா என்று செய்தியாளர்களிடம் சொல்லிவிட்டுதான் கேட்போம். எடப்பாடி பழனிசாமி 2 கோடி தொண்டர்கள் அதிமுகவில் உள்ளதாக கூறுவது சுத்த பொய். வாக்காளர் பட்டியலை கையில் வைத்துக்கொண்டு படிவம் எழுதி பூர்த்தி செய்தால் எப்படி உறுப்பினர்களாக சேர்க்க முடியும். எதிர்க்கட்சி தலைவர் பதவி மட்டுமே சட்டமன்ற விதிகளின்படி உள்ளது. சட்டமன்றத்தில் எனக்கு தரப்பட்டுள்ள இருக்கை முன்னாள் முதலமைச்சர் என்ற அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் உறுதியாக இரட்டை இலை சின்னத்தில்தான் நிற்போம்” என்று தெரிவித்தார்.