பிரதமர் நரேந்திர மோடி அவர்களை புதுடெல்லியில் இன்று அதிமுக கழக ஒருங்கிணைப்பாளர் திரு. ஓ. பன்னீர்செல்வம் மற்றும் கழக இணை ஒருங்கிணைப்பாளர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோர் நேரில் சந்தித்து தமிழகத்தின் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர்.
ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் பிரதமர் மோடியிடம் அளித்த மனுவில், “ மேகதாது அணைக்கட்ட அனுமதி வழங்கக்கூடாது, தமிழகத்திற்கு அதிகளவில் தடுப்பூசிகள் வழங்கவேண்டும், மீனவர் பிரச்னையில் சுமூகமான சூழலை உருவாக்க வேண்டும், காவிரி – கோதாவரி இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும், தமிழகத்தில் நெடுஞ்சாலை திட்டங்களை நிறைவேற்றவேண்டும்” ஆகிய கோரிக்கைகள் இடம்பெற்றுள்ளது.
பிரதமருடன் ஓபிஎஸ்-இபிஎஸ் சந்திப்பும், கொடுக்கப்பட்ட விளக்கமும்:
தமிழகத்தில் ஆட்சியை இழந்த அதிமுகவில் சலசலப்புகளுக்கு பஞ்சமில்லை. இரட்டைத் தலைமை விவகாரம், அதிமுகவினருடன் சசிகலா பேச்சு, உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி நீடிக்குமா, உட்கட்சித் தேர்தல் எப்போது என்பது உள்ளிட்ட பிரச்னைகள் தொடர்கின்றன.
இந்தசூழலில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் திடீரென்று டெல்லி புறப்பட்டுச் சென்றார். அவர் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியான நிலையில், திடீர் திருப்பமாக, அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் டெல்லி பயணமானார். தமிழக அரசியல் களத்தில் இப்பயணம் பல்வேறு யூகங்களுக்கு வித்திட்டது.
டெல்லியில் உள்ள தமிழ்நாடு அரசு இல்லத்தில் தங்கிய இருவரும், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியுடன் ஒரே காரில் பிரதமரை சந்திக்கச் சென்றனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, தமிழர்கள் நலன் சார்ந்த திட்டங்கள் குறித்து பிரதமரிடம் பேசியதாக தெரிவித்தார். அதேநேரத்தில் சசிகலா விவகாரம் உள்ளிட்ட அரசியல் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்க மறுத்துவிட்டார்.
இந்த சந்திப்புக்கு பின் அதிமுக வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்துக்கு போதுமான அளவில் கொரோனா தடுப்பூசிகளை வழங்க வேண்டும், இலங்கை அரசால் பிடித்துவைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர் படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், அதிமுக ஆட்சியில் பரிந்துரைக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலை திட்டங்களுக்கு நிதி ஒதுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். அளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திடீர் பயணமாக டெல்லி சென்ற அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தனர். அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக இச்சந்திப்பு கூறப்பட்டாலும், தமிழர்கள் நலன் சார்ந்த திட்டங்கள் குறித்து பேசியதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
<blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">மாண்புமிகு பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களை புதுடெல்லியில் இன்று கழக ஒருங்கிணைப்பாளர் திரு. ஓ. பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோர் நேரில் சந்தித்து, கீழ்கண்ட கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்றினை அளித்தார்கள். <a href="https://t.co/ya2w8JCzYW">pic.twitter.com/ya2w8JCzYW</a></p>— AIADMK (@AIADMKOfficial) <a href="https://twitter.com/AIADMKOfficial/status/1419661166721175554?ref_src=twsrc%5Etfw">July 26, 2021</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>
திடீர் சந்திப்பு - அரைமணி நேரம் நீடித்த உரையாடல்
டெல்லி நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடந்து கொண்டிருக்கும்போது இதுபோன்ற அரசியல் சந்திப்புகளில் பிரதமர் மோடி பங்கேற்பது வழக்கம் அல்ல. நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் நடந்த இந்த சந்திப்பு அரைமணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது.
அதேபோல, எந்த முன் அறிவிப்பும் இல்லாமல், எந்த காரணத்துக்காக பயணம் என்று அறிவிக்காமல், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் தனித்தனியே டெல்லி வந்து சேர்ந்தனர். ஓபிஎஸ், ஈபிஎஸ், அதிமுக சட்டமன்றக் கொறடா எஸ்.பி. வேலுமணி உள்ளிட்டோர் சந்திப்பில் பங்கேற்றனர். பிரதமரிடம் அளித்த மனு குறித்து அதிமுக தரப்பில் அறிக்கை அனுப்பப்பட்டாலும், இந்த சந்திப்பின்போது, சசிகலா விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான பணியை பல்வேறு மாநிலங்களில் தொடங்கிவிட்ட பாரதிய ஜனதா, தமிழ்நாட்டில் தொடர்ந்து அதிமுகவுடன் கூட்டணி வைத்தே தேர்தலை சந்திக்க திட்டமிட்டுள்ளது. கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு பாரதிய ஜனதாவின் மாநில தலைவர் அண்ணாமலை, ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ்ஸை தனித்தனியாக சந்தித்தபொழுதே பிரதமர் உடனான சந்திப்பு தொடர்பாக திட்டமிடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிமுகவுடன் கூட்டணி வைக்கும்போது அணிகள் இணைய வேண்டும் என பாரதிய ஜனதா விரும்புவதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தங்கள் முடிவை உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் தெரிவிக்குமாறு பிரதமர் அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.