தமிழ்நாடு

வனச்சரகங்களை புலிகள் காப்பகத்தில் இணைக்க எதிர்ப்பு

வனச்சரகங்களை புலிகள் காப்பகத்தில் இணைக்க எதிர்ப்பு

webteam

கொடைக்கானல் மேல்மலை வனச்சரகங்களை‌ ஆனைமலை புலிகள் காப்பகத்தில் இணைப்பதற்கு பாரதிய கிசான் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

திண்டு‌க்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள பத்து வனச்சரகங்களை,‌ தமிழகத்தின் 12ஆவது வனச் சரணாலயமாக அறிவிக்கை செய்து மத்திய அரசுக்கு, தமிழக அரசு கடந்த 2001ம் ஆண்டு பரிந்துரைத்தது. அதற்கு அப்போதே 108 கிராம மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து, பல கட்டப் போராட்ட‌ங்களை நடத்தினர். இதனால், மத்திய அரசு கொடைக்கானல் வனச்சரணாலய அறிவிப்பை ஏற்காமல் நிறுத்தி வைத்தது. 

இதையடுத்து வனச் சரணாலய அறிவிப்பில் உள்ள எல்லை வரையறையில் பல குளறுபடிகள் உள்ளதாகவும், அதை ‌மறுசீரமைப்பு செய்து சரணாலயம் அமைக்க அரசு முன்வர வேண்டும் என பாரதிய கிசான் விவசாய சங்கம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்நிலையில் கொடைக்கானல் மேல்மலை கிராமங்கள் அடங்கிய வனப்பகுதிகளில் உள்ள மன்னவனூர், பூம்பாறை, வந்தரேவு, பேரிஜம், பழனி உள்ளிட்ட பல்வேறு வனசரகங்களை ஆணைமலை புலிகள் காப்பகத்தில் இணைக்கப் போவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனால் மேல்மலை கிராம மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதற்கு பாரதிய கிசான் சங்கமும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும் அரசு உடனடியாக இந்த திட்டத்தை கைவிட வேண்டும் என்றும் பாரதிய கிசான் சங்கம் வலியுறுத்தியுள்ளது. 

கொடைக்கானல் மேல்மலை கிராம மக்கள் அங்கு மூன்று தலைமுறையாக வசித்து வருகின்றனர். பாரம்பரியமாக வசித்து வரும் அவர்களுக்கு அரசு இதுவரை பட்டா போன்ற எந்த ஆவணங்களையும் வழங்கவில்லை. இதனால் அப்பகுதியில் வாழும் மக்கள் அடிப்படை வசதியின்றி வாழ்ந்து வருகின்றனர். இந்தச் சூழலில் வனச்சரகங்களை புலிகள் காப்பகத்தில் இணைத்தால், அது காப்புக்காடாக மாறும். மேலும் அப்பகுதி வனத்துறை கட்டுப்பாட்டில் செல்லும். இதனால் வனத்துறை மேல்மலை கிராம மக்களை அங்கிருந்து அப்புறப்படுத்தப்படுவர் என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டிகின்றனர். எனவே வனச்சரகங்களை புலிகள் காப்பகத்தில் இணைக்க மேல்மலை கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.