தமிழ்நாடு

மதுக்கடைகள் திறக்க எதிப்பு : திமுக கூட்டணி போராட்டம்

மதுக்கடைகள் திறக்க எதிப்பு : திமுக கூட்டணி போராட்டம்

webteam

தமிழகத்தில் மதுக்கடைகளை திறக்க எதிர்ப்பு தெரிவித்து திமுக கூட்டணி கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் மதுக்கடைகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கில் பல்வேறு நிபந்தனைகளை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் மதுக்கடைகளை திறக்க அனுமதி வழங்கியது. இதனைத்தொடர்ந்து சென்னை நீங்கலாக தமிழகம் முழுவதும் மதுக்கடைகள் இன்று காலை 10 மணிக்கு திறக்கப்பட்டன.

இதனிடையே தமிழக அரசு மதுக்கடைகளை திறப்பதற்கு பல்வேறு எதிர்க்கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும், மதுக்கடைகள் திறக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் அனைவரும் கருப்புச் சின்னம் அணியுமாறு திமுக தலைமையிலான கூட்டணி கேட்டுக்கொண்டது.

‌மதுக்கடைகள் திறக்கப்படுவதைக் கண்டிக்கும் வகையில் காலை 10 மணிக்கு அவரவர் இல்லத்தின் முன் 5 பேருக்கு அதிகமாகாமல் நின்று அதிமுக அரசைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்புமாறும் திமுக கூட்டணி சார்பில் கோரப்பட்டது.

இந்நிலையில், தமிழகத்தில் மதுக்கடைகளை திறக்க எதிர்ப்பு தெரிவித்து திமுக கூட்டணி கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். திமுக தலைவர் ஸ்டாலின், துர்கா ஸ்டாலின், உதயநிதி, ஆகியோர் தங்கள் வீட்டின் முன்பு கருப்பு சின்னம் அணிந்து, பதாகைகள் ஏந்தி முழக்கமிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் பல திமுக கூட்டணி கட்சியினர் அவரவர் வீட்டின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.