தமிழ்நாடு

“சுஜித் விவகாரத்தில் ஸ்டாலின் காழ்ப்புணர்ச்சியோடு பேசுகிறார்” - முதலமைச்சர் பழனிசாமி

webteam

சுஜித் உயிரிழந்த நிகழ்வு தொடர்பாக எதிர்கட்சித் தலைவர் காழ்ப்புணர்ச்சியோடு பேசுவது வருத்தமளிப்பதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

திருச்சி, மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டியில் உள்ள ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து 2 வயது சிறுவன் சுஜித் உயிரிழந்தார். இந்த விவகாரத்தில் அரசை குற்றம்சாட்டி திமுக தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் பேசி வருகிறார். 

இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் பழனிசாமி, “சிறுவன் சுஜித்தை மீட்க இரவுபகல் பாராமல், மழை மற்றும் பண்டிகையை பொருட்படுத்தாமல் அனைத்து துறை அதிகாரிகளும் தொடர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் என்.டி.ஆர்.எஃப் (NDRF ), எஸ்.டி.ஆர்.எஃப் (SDRF), ஓ.என்.ஜி.சி (ONGC), என்.எல்.சி (NLC), என்.ஐ.டி (NIT), அண்ணா பல்கலை ஆகிய நிறுவனங்களுடன் தொடர்புகொண்டு தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்றது. 

அமைச்சர்களும் அங்கேயே முகாமிட்டு மீட்பு பணியினை கண்காணித்து வந்தனர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக சிறுவனை உயிருடன் மீட்க முடியவில்லை. சிறுவனை மீட்க இவ்வளவு முயற்சிகள் செய்தும் இதுகுறித்து எதிர்க்கட்சித்தலைவர் காழ்ப்புணர்ச்சியோடு பேசிவருவது வருத்தமளிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.