ஈரோட்டில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை செய்வதற்கு எதிர்ப்பு பரப்புரையின்போது காங்கிரஸ் மற்றும் திமுகவினர் கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு வரும் பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்தலில் திமுக வேட்பாளர் சந்திரகுமார், நாம் தமிழர் கட்சியின் சீதாலட்சுமி உள்பட 46 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர்.
அந்த வகையில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமியை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று முதல் ஈரோட்டில் பரப்புரையை மேற்கொண்டுள்ளார். சீமான் தந்தை பெரியார் குறித்து இழிவாகவும், அவதூறாகவும் பேசியதாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே பரப்புரைக்காக வந்துள்ள சீமான் தங்கியுள்ள விடுதிக்கு பலத்த காவல்துறையினர் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்நிலையில், காலைமாட்டு சிலை, கள்ளுக்கடை மேடு, மரப்பாலம் வழியாக கச்சேரி வீதி நால்ரோட்டில் திறந்த வெளி வாகனத்தில் நின்றபடி நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் பரப்புரை மேற்கொண்டிருந்தனர். அப்போது அங்குவந்த திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் பெரியார் குறித்து இழிவாக பேசிய சீமான் ஈரோட்டில் பரப்புரை செய்யக்கூடாது என எதிர்ப்பு கோஷம் எழுப்பினர். அப்போது அங்கிருந்த நாம் தமிழர் கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனையடுத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் எதிர்ப்பு தெரிவித்தவர்களை அப்புறப்படுத்த முயற்சித்தனர். அப்போது சீமான் பேச தொடங்கியவுடன் மீண்டும் சீமானுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பினர். காவல்துறையினர் அவர்களை அப்புறப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இச்சம்பவம் நடைபெற்ற பகுதி அருகே மறைந்த ஈவிகேஎஸ் இளங்கோவனின் வீடு அமைந்ததுள்ளது குறிப்பிடத்தக்கது.