கடல் மட்டத்திலிருந்து 7350 அடி உயரத்தில் அமைந்துள்ள நீலகிரி மாவட்டம் உதகையில், கடந்த ஒரு வாரமாக கடும் பனிப்பொழிவு நீடிக்கிறது. மேலும், வெப்பநிலை மைனஸ் 1 டிகிரியாகப் பதிவாகியிருக்கிறது.
இந்த நிலையில், இந்த உறைபனி சூழலைச் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றனர். அதேசமயம், இந்தக் கடும் குளிர், நீலகிரியின் பாரம்பரிய தாவரங்கள் மற்றும் அரிய வகை வன உயிரினங்கள் வாழும் பல்லுயிர் சூழலுக்கு மிகவும் அவசியமானது என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவிக்கிறார்கள். அதிகப்படியான பனிப்பொழிவு, விதைகள் இயற்கையாக முளைப்பதற்கும், புல்வெளிகள் நீரை உறிஞ்சி நிலத்தடி ஈரப்பதத்தைத் தக்கவைக்கவும் உதவுகிறது என்கிறார்கள்.
மேலும், இந்த உறைபனிச் சூழலால் பலவகை வலசைப் பறவைகளின் வருகையும் அதிகரித்துள்ளது. உறைபனி கடந்த ஆண்டைவிட ஒரு மாதம் தாமதமாகத் தொடங்கினாலும், தற்போது நிலவும் கடும் குளிரை ரசிக்கத் தமிழகம் மட்டுமின்றி கேரளம், கர்நாடகா, ஆந்திரா போன்ற அண்டை மாநிலங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் உதகையில் குவிந்து வருகின்றனர். இமாச்சலப் பிரதேசம் மற்றும் குலுமனாலியில் கிடைக்கும் அதே அனுபவம் இங்கேயே கிடைப்பதாகப் பயணிகள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர். பல்லுயிர் சூழலைப் பாதுகாப்பதுடன், சுற்றுலாவையும் மேம்படுத்தும் இந்த உறைபனி காலத்தை உதகை மக்கள் கொண்டாடி வருகின்றனர்.