தமிழ்நாடு

”பப்ஜி விளையாட்டிற்கு முடிவு கட்டாமல் விடப்போவதில்லை”- உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள்!

webteam

பப்ஜி, ஃப்ரி பயர்  போன்ற தடை செய்யப்பட்ட ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையாகும் இளம் தலைமுறையினர் மற்றும் குழந்தைகளை மீட்பது தொடர்பாக. உயர் நீதிமன்ற மதுரை கிளை புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

VPN செயலியை முறைப்படுத்துவது தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து வழக்காக எடுத்துள்ளது. இது தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை கிளை பதிவாளர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ' ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை ஒன்றில் மாணவர்கள் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையாக இருந்தது தெரியவந்தது.

2020 ஆம் ஆண்டு பாதுகாப்பு காரணமாக, மத்திய அரசு சில ஆன்லைன் விளையாட்டுகளுக்கும், சீன செயலிகளுக்கும் தடை விதித்தது. நமது நாடு, இளம் தலைமுறையினரின் கைகளிலேயே உள்ளது. நாட்டின் முன்னேற்றத்திற்கு இளம் தலைமுறையினரின் உளவியல், உடல், பொருளாதாரம், சமூக அளவில் திறன் படைத்தவர்களாக இருப்பது அவசியம்.

ஆனால், அவற்றை வளர்த்துக் கொள்வதற்கு பதிலாக, இதுபோன்ற ஆன்லைன் விளையாட்டுகளை விளையாடுவது, சமூக வலைதளங்களில் நேரங்களை செலவிடுவது போன்றவற்றில் கவனம் செலுத்துகின்றனர். ஆகவே இதுபோன்ற ஆன்லைன் விளையாட்டுகளை தடுப்பதும் அவற்றிலிருந்து இளைஞர்களை மீட்பதும் அவசியமான ஒன்று. இந்த விஷயத்தை கவனத்தில் கொண்டே, உயர் நீதிமன்ற மதுரை கிளை இதனை பொதுநல வழக்காக தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது.

VPN செயலிகளை முறைப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தடை செய்யப்பட்ட விளையாட்டுகள், செயலிகளை பதிவிறக்கம் செய்வது தொடர்பாக வீடியோக்களை வெளியிடும் யூடியூப் சேனல்களை முறைப்படுத்த வேண்டும். தடை செய்யப்பட்ட விளையாட்டுகளை விளையாடக் கூடாது என்பது தொடர்பாக பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைய தலைமுறையினரிடம் உரிய விழிப்புணர்வை ஏற்படுத்த மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்' என கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் அமர்வு, 'பப்ஜி, ஃப்ரி பயர் போன்ற தடை செய்யப்பட்ட ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையாவது இளம் தலைமுறையினர், குழந்தைகளிடையே கடும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஆன்லைன் விளையாட்டுகளால் குழந்தைகள் விளையாட்டு மைதானத்தையே மறந்துவிட்டனர். ஆன்லைன் விளையாட்டுகளுக்கு இளைஞர்கள் அடிமையாவதை தடுக்கும் நடவடிக்கைகளே, அவர்கள் மீது மத்திய மாநில அரசுகள் கொண்டுள்ள அக்கறையின் வெளிப்பாடு இது.

இளைய சமுதாயத்தின் மீதான அக்கறை மட்டுமல்ல ஒட்டு மொத்த தேசத்தின் மீதான அக்கறை அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிகளை மட்டுப்படுத்த இயலாது ஆனால் இளையோர் அவற்றை சரியான முறையில் பயன்படுத்துவது உறுதிப்படுத்த வேண்டும் எனத் தெரிவித்தனர்.

அரசு தரப்பில், 'பப்ஜி, ஃப்ரி பயர்  போன்ற விளையாட்டுகளை இளைஞர்கள் விளையாடக் கூடாது என்பதில் தமிழக அரசும் உறுதியாக உள்ளது. தற்போது கூட ஆன்லைன் ரம்மி விளையாட்டுகள் தடை செய்யப்பட்டுள்ளன' என தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து நீதிபதிகள், 'வழக்கறிஞர் சமுதாயம் உலகையே மாற்றும் ஆற்றல் பெற்றது. ஆகவே இந்த வழக்கு தொடர்பாக வழக்கறிஞர்கள் விபரங்களை தாக்கல் செய்யலாம். இந்த விவகாரத்திற்கு முடிவு கட்டாமல் நீதிமன்றம் விடப்போவதில்லை என குறிப்பிட்டு 'தடை செய்யப்பட்ட விளையாட்டுகள் கிடைப்பதை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து மத்திய, மாநில அரசுகளும், வழக்கறிஞர்களும் தரவுகளுடன் அறிக்கையாக தாக்கல் செய்யவும், யூடியூப், கூகுள் பதிலளிக்கவும் உத்தரவிட்டு வழக்கை அக்டோபர் 27ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.