தமிழ்நாடு

ஆன்லைன் வகுப்பு: கேரள மாநில செல்போன் சிக்னல் தேடி அலையும் நீலகிரி மாணவர்கள்

kaleelrahman

பந்தலூர் அருகே அரசு தேயிலை தோட்ட குடியிருப்பில் வசிக்கும் மாணவர்கள் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க கேரள மாநில செல்போன் டவர் சிக்னல் தேடி அலைகின்றனர்.

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே உள்ள சேரம்பாடி, செக்போஸ்ட் பகுதியில் உள்ளது நம்பர் - 4 அரசு தேயிலை தோட்ட குடியிருப்பு. கேரளா வனப்பகுதியை ஒட்டி இருக்கக்கூடிய இந்த குடியிருப்பு பகுதியில் சுமார் 30-க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த குடியிருப்பு பகுதியில் வசித்து வருகிறார்கள்.

இந்நிலையில், தற்போது பள்ளிகள் மூடப்பட்டுள்ளன நிலையில், மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது. இந்த பகுதியை சேர்ந்த மாணவர்கள் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க செல்போன் சிக்னல் இல்லாமல் தடுமாறி வருகிறார்கள். குடியிருப்பு அமைந்திருக்கக் கூடிய பகுதியில் இருந்து நீண்ட தொலைவில் உள்ள வனத்தை ஒட்டிய பகுதியில் அமர்ந்தால் மட்டுமே இவர்களுக்கு கேரள மாநில செல்போன் சிக்னல் கிடைக்கும்.

இப்படி தினம்தோறும் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்பதற்காக வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமுள்ள வனத்தை ஒட்டிய பகுதியில் இவர்கள் அமர்ந்து ஆன்லைன் வகுப்பில் பங்கேற்று வருகிறார்கள். எனவே, மாணவர்கள் சிரமத்தை போக்கும் வகையில் அந்த பகுதியில் செல்போன் சிக்னல் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.