தமிழ்நாடு

தோண்டப்படும் தமிழகம்: ஓஎன்ஜிசியின் அதிரடி திட்டம்

தோண்டப்படும் தமிழகம்: ஓஎன்ஜிசியின் அதிரடி திட்டம்

Rasus

பொன் விளையும் பூமியைப் போற்றி வணங்கி, காலம் காலமாக மேற்கொண்டு வரும் வேளாண்மைத் தொழில் அழிந்து போகாமல் காப்பாற்ற விவசாயிகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட வேண்டியுள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமான காவிரி டெல்டா உள்ளிட்ட 110 இடங்களில் எண்ணெய் துரப்பனக் கிணறுகளைத் தோண்ட ஓஎன்ஜிசி நிறுவனம் திட்டமிட்டுள்ளது விவசாயிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டின் ஒட்டுமொத்த எரிசக்தியில் பாதியை எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு மூலமாகப் பெற ஓஎன்ஜிசி எனப்படும் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகம் திட்டமிட்டுள்ளது. நாட்டில் பெட்ரோலியப் பொருட்களின் தேவை வேகமாக அதிகரித்து வரும் நிலையில், ஹைட்ரோ கார்பன் நுகர்வை 2030-ஆம் ஆண்டுக்குள் தற்போதைய 22 சதவிகிதத்திலிருந்து, 27 சதவிகிதமாக அதிகரிக்க ஓஎன்ஜிசி முடிவெடுத்துள்ளது. இதற்காக வளமான காவிரிப்படுகையில் ஏற்கெனவே பல்வேறு இடங்களில் எண்ணெய்க் கிணறு அமைக்கும் பணியில் ஓஎன்ஜிசி ஈடுபட்டுள்ளது. ஆனால் சம்பந்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் விவசாயிகள் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

டெல்டா மாவட்டங்களில் ஆங்காங்கே கிணறு தோண்டி, கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு எடுத்து அதைக் குழாய் மூலம் தலைமைக் கிடங்கிற்கு கொண்டு சென்று, அங்கு சுத்திகரித்து பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் என தனித்தனியே பிரித்து நாடு முழுவதும் அனுப்பப்படுகிறது. ஏற்கெனவே, இவ்வாறு எண்ணெய்க் கிணறு அமைக்கும் பணியில் பல்வேறு எதிர்ப்புகளை சந்தித்து வரும் ஓஎன்ஜிசி, காவிரிப் படுகையில் மேலும், 110 இடங்களில் துரப்பனக் கிணறு அமைக்க திட்டமிட்டுள்ளது.

இதற்காக நரிமணம், குத்தாலம் ஆகிய ஊர்களில் உள்ளது போன்று, மத்திய சேமிப்புக் கிடங்கு அமைக்க நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள மாதானம் என்ற இடத்தில் 20 ஏக்கர் நிலத்தை ஓஎன்ஜிசி கண்டறிந்துள்ளது. இங்கு 20 கிணறுகள் தோண்டப்பட உள்ளன. மேலும், காளியில் 5 கிணறுகளும், குத்தாலத்தில் 10, நரிமணத்தில் 10, அடியக்கமங்கலத்தில் 5, கீழ்வேளூரில் 3, நன்னிலத்தில் 5, ஆதிச்சபுரத்தில் 4, வடக்குகோவில்களப்பாலில் 10, மாத்தூரில் 3, பந்தநல்லூரில் 10 மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் கஞ்சிரங்குடியில் 10, பெருங்குளம் பெரியபட்டினத்தில் 10, பாக் ஜலசந்தியின் மேல்மட்டத்தில் 5 கிணறுகள் தோண்ட மத்திய அரசின் எரிசக்தித்துறை திட்டமிட்டுள்ளது.

எண்ணெய்த் துரப்பனப் பணிகள் காவிரிப்படுகையில் கடந்த 1985ஆம் ஆண்டும், ராமநாதபுரம் மாவட்டத்தில் 1994-ஆம் ஆண்டும் தொடங்கின. தற்போது மேலும், 110 இடங்களில் கிணறுகள் தோண்ட திட்டமிட்டுள்ளது. ஒரு கிணறுக்கு இரண்டு ஹெக்டேர் நிலம் தேவை. ஒரு கிணறைத் தோண்ட 12 முதல் 15 கோடி ரூபாய் திட்ட மதிப்பாக கணக்கிடப்பட்டுள்ளது. ஒரு கிணற்றைத் தோண்ட 65 நாள்களிலிருந்து 75 நாள்கள் வரை ஆகும். இதனிடையே, புதிய கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு கிணறுகளை அமைக்கவும், உற்பத்தியை அதிகரிக்கவும் 50 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்யப் போவதாக ஓஎன்ஜிசியின் தலைவர் ஆர்.எஸ். ஷர்மா அறிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கும், நாகை மாவட்டம் கதிராமங்கலத்தில் கச்சா எண்ணெய் திட்டத்திற்கும் எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள், விவசாயிகள், அரசியல் கட்சியினர் என அனைத்து தரப்பினரும் போராடி வரும் நிலையில் தற்போது புதிதாக 110 கிணறுகளைத் தோண்ட ஓஎன்ஜிசி திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்தை தயாரித்துள்ள ஓஎன்ஜிசி, அதை அடுத்தக் கட்டமாக மத்திய சுற்றுச்சூழல்துறையின் அனுமதிக்காக அனுப்பியுள்ளது. திட்டத்தை அனுமதிப்பதா, வேண்டாமா என்பது குறித்து சுற்றுச்சூழல் அமைச்சகம் பரிசீலித்து வருவது குறிப்பிடத்தக்கது.