தமிழ்நாடு

‘பிகில்’ பார்க்க பைக்கில் சீறிப்பாய்ந்த இளைஞர் - விபத்தில் சிக்கி குழந்தை பலி

‘பிகில்’ பார்க்க பைக்கில் சீறிப்பாய்ந்த இளைஞர் - விபத்தில் சிக்கி குழந்தை பலி

webteam

திருவள்ளூரில் இரு சக்கர வாகனத்தில் பிகில் படம் பார்க்க சென்றவர் மற்றொரு இரு சக்கர வாகனத்தின் மீது மோதியதில் ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழந்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் அடுத்த பிரியாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் ருத்ரகிரி. இவரது மனைவி சர்மிளா. இவர்களுக்கு 10 ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் பூஜாஸ்ரீ என்ற ஒன்றரை வயது பெண் குழந்தை உள்ளது. ருத்ரகிரி, தமது இரு சக்கர வாகனத்தில் குழந்தையை முன்னே அமர வைத்து கொண்டு, கடைக்கு சென்றதாக கூறப்படுகிறது. அப்போது, எதிரே வேகமாக வந்த மற்றொரு இரு சக்கர வாகனம் நேருக்கு நேர் மோதியது.

(உயிரிழந்த குழந்தை)

இதில் ஒன்றரை வயது பூஜாஸ்ரீ, 5 அடி தூரத்தில் தூக்கி வீசப்பட்டு, படுகாயம் அடைந்தார். குழந்தையின் தந்தை ருத்ரகிரியும் படுகாயம் அடைந்தார். அருகில் இருந்தவர்கள், படுகாயம் அடைந்த இருவரையும் மீட்டு அவசர ஊர்தியில் திருவள்ளூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு  மருத்துவ மனைக்கு மருத்துவர்கள் அனுப்பி வைத்தனர். 

ஆனால், வழியில் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. மருத்துவர்களின் போராட்டத்தால், அங்கு உடற்கூறு ஆய்வு செய்யாமல் சென்னை எழும்பூர் குழந்தைகள் நலமருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அங்கு நாளை காலை உடற்கூறு ஆய்வு நடைபெற உள்ளது.

(தேடப்படும் நபர் இன்பரசு)

இதனிடையே விபத்து ஏற்படுத்திய நபர், தமது இரு சக்கர வாகனத்தை விட்டு தப்பி ஓடியுள்ளார். நிலைத்தடுமாறி கீழே விழுந்த அவரை மீட்டவர், அவரையும் திருவள்ளூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்ட போது, அவர் தப்பி ஓடி விட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 

இந்த விபத்து தொடர்பாக திருவள்ளூர் தாலுக்கா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து ஏற்படுத்திய நபர் பெயர் இன்பரசு எனவும், இவர் கசவநல்லூர் பகுதியை சேர்ந்தவர் என்பதும், நடிகர் விஜய் நடித்த பிகில் படத்தை காண திருவள்ளூருக்கு சென்ற போது விபத்து ஏற்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. படுகாயம் அடைந்த ருத்ரகிரி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி, தப்பி ஓடிய இன்பரசுவை தேடி வருகின்றனர்.